Last Updated : 04 Dec, 2020 01:55 PM

 

Published : 04 Dec 2020 01:55 PM
Last Updated : 04 Dec 2020 01:55 PM

ஏகெளரியம்மனுக்கு எருமைக்கன்று நேர்த்திக்கடன்! 

தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள், ஏகெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது ஏகெளரியம்மன் திருக்கோயில். சோழர்கள் காலத்துக் கோயில். கரிகாற் சோழன் காலத்துக் கோயில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

’பெண் என்றால் இளப்பமாகப் பார்ப்பது’ இந்தக் காலத்தில்தான் என்றில்லை... அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. ‘ஒரு பெண்ணால் நம்மை என்ன செய்துவிடமுடியும்?’ என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கனும் அப்படித்தான் நினைத்தான். ‘நினைப்பு பொழப்பக் கெடுக்கும்’ என்று சொல்லுவார்கள். தஞ்சாசுரனின் இந்த நினைப்பு, சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய வைத்தது. தவத்தின் பலனாக வரம் கிடைக்கவேண்டும் என விரும்பினான். சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான். ‘சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது. மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது. பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது. இந்த ஊர் என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்’ என்று வரம் கேட்டான். அப்படியே தந்தார் சிவனார்.

அவ்வளவுதான். பேயாட்டம் ஆடினான் தஞ்சாசுரன். தேவர்கள் கலங்கினார்கள். முனிவர்கள் நடுங்கினார்கள். மக்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு கதறினார்கள். தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவை சந்தித்து முறையிட்டார்கள். மகாவிஷ்ணுவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள். பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவபெருமானை சந்தித்து வணங்கினார்கள். ‘எந்த ஆணாலும் உயிர் போகக் கூடாது என்றும் நம் மூவராலும் உயிர் போகக் கூடாது என்றும் அவன் வரம் கேட்டான். நீங்களும் கொடுத்துவிட்டீர்களே... இது நியாயமா? என்ன செய்வது?’ என்று வேண்டினார்கள். சிவபெருமான், உமையவளைப் பார்த்தார். அழைத்தார். பார்வதிதேவி புரிந்துகொண்டார். தன் வாகனமான சிங்கம் கர்ஜித்து வந்தது. அதில் அமர்ந்துகொண்டாள். கடும் உக்கிரத்துடன் ஆத்திரத்துடன் புறப்பட்டாள். தஞ்சாசுரனுடன் போரிட்டாள். அசுரனும் ஏக பலம் பொருந்தியவன். ஏகத்துக்கும் பலம் கொண்டவன். எக்கச்சக்க வரங்கள் வாங்கி வைத்திருப்பவன். பலப்பல உருவங்கள் எடுத்து மோதினான். சக்திக்கு முன்னே எத்தனை அசுரனாக இருந்தும் அவன் தூசுதான். ஊதித்தள்ளினாள் தேவி. பந்தென வீசியெறிந்தாள். எருமையாக உருவெடுத்தான். அப்படியே இரண்டாகப் பிளந்து அழித்தாள். செத்தொழிந்தான் அரக்கன்.

ஆனாலும் பராசக்தியின் உக்கிரம் தணியவில்லை. கோபம் குறையவில்லை. ஆகாயமும் பூமியும் கிடுகிடுத்தன. பயிர் செடிகொடிகளெல்லாம் வாடின. மழை இல்லை. நிலமெல்லாம் பாளம் பாளமாகின. சுட்டெரித்தது வெயில். வறட்சியில் துடித்தார்கள் மக்கள். சிவனாரிடம் முறையிட்டார்கள்.

உமையவளிடம் வந்தார் சிவனார். ‘ஏ கெளரி’ என அதட்டலாகவும் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் அழைத்தார். அமைதிப்படுத்தினார். சாந்தப்படுத்தினார். கோபம் குறைத்தார். உக்கிரம் போக்கினார். சாந்தப்படுத்தினார்.

அந்த இடத்தில் இருந்துகொண்டு இன்றைக்கும் அருள்மழை பொழிந்து அகிலத்தைக் காத்து வருகிறாள் தேவி. தஞ்சாசுரன் வேண்டுகோளின்படியே, அந்த ஊர் தஞ்சாவூர் என்றழைக்கப்படுகிறது. அம்மன், ஏகெளரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள்.

தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு அடுத்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஏகெளரியம்மன் கோயில்.

இங்கே சந்நிதியில், உக்கிரமாகவும் அதேசமயம் சாந்தசொரூபினியாகவும் வீற்றிருக்கிறாள் ஏகெளரியம்மன். கரிகாற்சோழன் காலத்துக் கோயில் என்கிறது ஸ்தல வரலாறு.

அந்தக் காலத்தில், போருக்குப் புறப்படுவதற்கு முன்பு ஆயுதங்களை இவளின் திருவடியில் வைத்து பூஜைகள் போடப்பட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் வாழ்வில் நம் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை, தெரிந்திடாத, அறிந்திடாத எதிரிகளை ஏகெளரியம்மனை சரணடைந்தால், சகலத்தையும் விரட்டியடித்து, சகலரையும் விரட்டியடித்துக் காத்தருள்வாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

பெளர்ணமி நாளில், அக்கம்பக்க ஊரிலெருந்தெல்லாம் வந்து ஏகெளரி அம்மனை வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள், ஏகெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x