

சபரிமலை என்றதும் நம் நினைவுக்கு வருவது அந்த பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளைக் கடந்தால்தான் பதினெட்டாம்படியானை தரிசிக்க முடியும். பதினெட்டுப் படிகளுக்கு... பதினெட்டுப் படிகளில்... ஒவ்வொரு படிக்கும் ஐயப்பனின் திருநாமங்கள் கொண்டு அழைக்கப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சபரிமலையில் குடிகொண்டு ஆட்சி செய்யும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்கு, பதினெட்டுப் படிகள் ஏற வேண்டும். இந்த பதினெட்டுப் படிகளுக்கும் விளக்கத் தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது, முதல் ஐந்துபடிகள் மெய், வாய், கண், மூக்கு, காது என ஐம்புலன்களைக் குறிக்கின்றன. ஆறு முதல் 13 படிகள் வரை அஷ்டமா ஸித்திகளைக் குறிக்கும். பதினான்கு, பதினைந்து, பதினாறு என மூன்று படிகளும் மூன்று வித குணங்களைக் குறிக்கும். பதினேழாவது படி ஞானத்தைக் குறிக்கும். பதினெட்டாவது அஞ்ஞானத்தைக் குறிக்கும்.
அதேபோல, பதினெட்டுப் படிகளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் குடிகொண்டிருப்பதாக ஸ்தல புராணம் விவரிக்கிறது. சூரியன், சிவபெருமான், சந்திரன், சக்தி (பார்வதிதேவி), செவ்வாய், ஆறுமுகக் கடவுள், புதன் பகவான், மகாவிஷ்ணு, குரு பகவான், பிரம்மா, சுக்கிரன், திருவரங்கன், சனீஸ்வரர், எமதருமன், ராகு பகவான், காளிதேவி, கேது பகவான், விநாயகப் பெருமான் ஆகிய தெய்வங்களின் சாந்நித்தியங்கள் திகழ்கின்றன. .
பதினெட்டுப் படிகளைப் போலவே, இன்னொரு பதினெட்டு... ஆயுதங்கள். மகிஷியை வதம் செய்வதற்கு ஐயப்ப சுவாமி பயன்படுத்திய ஆயுதங்கள் பதினெட்டு என விவரிக்கிறது மணிகண்ட புராணம். வில், வாள், பரிசை, குந்தம், கைவாள், ஈட்டி, முசலம், முள்தடி, கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை என பதினெட்டு ஆயுதங்களுடன் சென்று மகிஷியை வதம் செய்தார் ஐயப்ப சுவாமி.
பதினெட்டுப் படிகள் மட்டுமின்றி, சபரிமலையின் தாத்பர்யங்களை முழுவதுமாக அறிந்து உணர்ந்து, சபரிகிரிவாசனை தரிசியுங்கள். சபரிமலையின் ஒவ்வொரு இடமும் புனிதமானவை. புராணத்துடன் தொடர்பு கொண்டவை. எனவே ஒவ்வொரு இடத்தையும் புரிந்து வேண்டுங்கள்.
சுவாமியே சரணம் ஐயப்பா!