

சபரிமலை நாயகனை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். அருகில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று கண் குளிர தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருள்வார் ஐயன் ஐயப்பன். தொழிலில் லாபத்தையும் விருத்தியையும் தந்தருள்வான். இழந்தவற்றை மீட்டுத் தருவான்.
ஐயப்பன் என்றதும் நம் நினைவுக்கு வருவது... அந்த ஐயப்பன் நின்ற தலம், நடந்த தலம், புலி மீது அமர்ந்து வந்த தலம், தெய்வமாகவே அமர்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் தலம்... சபரிமலை திருத்தலம்!
சபரிமலை என்றதும் நம் நினைவுக்கு வருவது அந்த பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளைக் கடந்தால்தான் பதினெட்டாம்படியானை தரிசிக்க முடியும். பதினெட்டுப் படிகளுக்கு... பதினெட்டுப் படிகளில்... ஒவ்வொரு படிக்கும் ஐயப்பனின் திருநாமங்கள் கொண்டு அழைக்கப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஐயப்ப சுவாமிக்கு ஏராளமான திருநாமங்கள் உண்டு. அவற்றில், முதலாம் படிக்கு குளத்தூர் பாலன் என்று பெயர். இரண்டாம்படிக்கு ஆரியங்காவு அனந்தரூபன் என்று திருநாமம் சூட்டியிருப்பதாகத் தெரிவிக்கிறது புராணம். மூன்றாம்படிக்கு எரிமேலி ஏழைப்பங்காளன் என்றும், நான்காம் படிக்கு ஐந்துமலை தேவன், ஐந்தாம் திருப்படிக்கு ஐங்கரன் சகோதரன், ஆறாம் திருப்படிக்கு கலியுக வரதன், ஏழாம் திருப்படிக்கு கருணாகர தேவன் என்றெல்லாம் திருநாமங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
எட்டாம் திருப்படிக்கு சத்ய பரிபாலகன், ஒன்பதாம் திருப்படிக்கு சற்குண சீலன், பத்தாம் திருப்படிக்கு சபரிமலை வாசன், பதினொன்றாம் திருப்படிக்கு வீரமணிகண்டன், பனிரெண்டாம் திருப்படிக்கு விண்ணவர் தேவன் என்றும் திருநாமங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
பதிமூன்றாம் திருப்படிக்கு மோகினி பாலன், பதினான்காம் திருப்படிக்கு சாந்த ஸ்வரூபன், பதினைந்தாம் திருப்படிக்கு சற்குணநாதன், பதினாறாம் திருப்படிக்கு நற்குணக் கொழுந்தன், பதினேழாம் திருப்படிக்கு உள்ளத்து அமர்வோன் என்றும் பதினெட்டாம் திருப்படிக்கு ஐயப்ப சுவாமி என்றும் திருநாமங்கள் சொல்லி அழைக்கப்படுகின்றன.
அதேபோல்,
ஓம் க்ரும் நம; பராய
கோப்த்ரே நம;
என்று சொல்லி, ஐயப்ப சுவாமியை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
அதாவது, இந்தக் கலியுகத்தில் சகலவிதமான துன்பங்களில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் மக்கள் அனைவரையும் அரவணைத்து, ரட்சித்துக் காத்தருளும் சக்தி கொண்ட இறைவனான ஐயப்ப சுவாமியே... உன்னை வணங்குகிறேன் என்று அர்த்தம்.
சபரிமலை நாயகனை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். அருகில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று கண் குளிர தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருள்வார் ஐயன் ஐயப்பன். தொழிலில் லாபத்தையும் விருத்தியையும் தந்தருள்வான். இழந்தவற்றை மீட்டுத் தருவான்.