Last Updated : 03 Dec, 2020 05:26 PM

 

Published : 03 Dec 2020 05:26 PM
Last Updated : 03 Dec 2020 05:26 PM

அருளும் பொருளும் அள்ளித்தருவார் ஐயப்ப சுவாமி! 

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி!

ஐயப்ப வழிபாடு மிக எளிமையானது. இந்த வழிபாட்டுக்குத் தேவை ஒழுக்கம். ஒழுக்கத்துடன் இருந்துவிட்டால் மனதில் அமைதி வந்துவிடும். மனதில் அமைதி குடிகொண்டுவிட்டால், ஆரவாரத்துக்கோ கர்வத்துக்கோ இடமிருக்காது. கர்வமில்லாத போது, பக்தி வந்துவிடும். பக்தியின் உச்சபட்ச நிலை என்பதுதான் சரணாகதி. ‘உன்னைத் தவிர எனக்கு எவருமில்லை. நீயே எனக்கு கதி’ என்று முழுவதும் ஒப்படைத்துவிட்டு செயல்படுகிற புத்தி வந்துவிடும்.

‘எனக்கு எப்போ என்ன தரணும்னு அவனுக்குத் தெரியும்யா. அவன் பாத்துக்குவான்’ என்று நாம்பாட்டுக்கு நம்முடைய வேலையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிற மனோநிலை வந்துவிடும்.

’’ஐயப்ப விரதத்தின் நோக்கமும் பூஜையின் தாத்பரியமும் அப்படியான சாத்வீக மனநிலைக்கு நம்மை மெல்ல மெல்ல தயார்படுத்துகிற முயற்சிதான்’’ என்கிறார் ஐயப்ப உபந்யாஸகர் அரவிந்த் சுப்ரமணியம்.

ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.

தர்ம சாஸ்தா காயத்ரீ:

ஓம் பூதாதி பாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.

இதேபோல், ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகா மந்திரம் வலிமை மிக்கது.

பூதநாத ஸதானந்தா

சர்வ பூத தயாபரா

ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ

சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக, புதன்கிழமைகளில் இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் தரும். எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி! அருளும் பொருளும் அள்ளித்தருவார் ஐயப்ப சுவாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x