

சாஸ்தா பகவானின் காயத்ரியை பாராயணம் சொல்லி வழிபட்டு வந்தால், எதிரிகள் வீழ்வார்கள். எதிர்ப்புகள் அடங்கும். காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் தர்மசாஸ்தா என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஐயப்ப சுவாமிக்கு மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு வருகிறார்கள் பக்தர்கள். சபரிமலைக்குச் செல்வதற்கு உரிய நியமங்களுடன் பூஜைகள் செய்து, அன்னதானம் செய்து ஐயன் ஐயப்ப சுவாமியை வழிபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் அய்யனார் என்ற பெயரில் இறைவன் குடிக்கொண்டிருக்கும் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அதேபோல், சாஸ்தா குடிகொண்டிருக்கும் ஆலயங்களும் அமைந்துள்ளன. தஞ்சைப் பகுதியில் அய்யனார் வழிபாடாகவும் தென் மாவட்ட நெல்லை, குமரி முதலான மாவட்டங்களில் சாஸ்தா வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
குமரியைக் கடந்து கேரளத்தில் ஐயப்ப வழிபாடு முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது. சாஸ்தா, அய்யனார், ஐயப்ப சுவாமி என இருந்தாலும் மூவரும் ஒருவரே என்றும் ஒவ்வொரு தருணங்களில் வெளிப்பட்ட அவதாரங்கள் என்றும் சொல்கிறார்கள்.
பூரண புஷ்கலை சமேதராக அய்யனாரும் சாஸ்தாவும் காட்சி தருகிறார்கள். ஐயப்ப சுவாமியோ பிரம்மச்சாரியாகக் காட்சி தருகிறார். இப்படி தன் ஒவ்வொரு அவதாரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து, காத்தருளியுள்ளார். இன்றைக்கும் பல கோயில்களில் இருந்துகொண்டு, அருள்பாலித்து வருகிறார் சாஸ்தா.
துஷ்ட சக்திகளை அழித்துக் காப்பவர். தீய சிந்தனைகள் கொண்டவர்களை நெருங்கவிடாமல் நமக்கு அரணாக இருந்து காப்பவர் என்று சாஸ்தாவின் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள்.
சாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலத்தைக் கொடுக்கும். நல்ல நல்ல பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஸ்ரீசாஸ்தா காயத்ரி
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
எனும் சாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், தீராத சிக்கல்களையும் தீர்த்துவைப்பார் சாஸ்தா பகவான். நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் விரட்டியடித்துக் காத்தருள்வார் சாஸ்தா.