Last Updated : 03 Dec, 2020 12:33 PM

 

Published : 03 Dec 2020 12:33 PM
Last Updated : 03 Dec 2020 12:33 PM

விடியலைத் தருவார்... மேற்கு நோக்கிய பேரூர் முருகன்! 

மேற்கு நோக்கிய நிலையில் காட்சி தரும் பேரூர் முருகனை வணங்குங்கள். பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் பால தண்டாயுதபாணி.

கோவை மாநகரில் உள்ள மிக முக்கியமான இடங்களில் பேரூர் திருத்தலமும் ஒன்று. இந்தத் திருத்தலத்தில் பிரமாண்டமான கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் பட்டீஸ்வரர்.

புராண - புராதனப் பெருமைகள் கொண்ட பேரூர் திருத்தலத்தில் விநாயகப் பெருமான் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். அதேபோல் ஆடல்வல்லான் என்று போற்றப்படும் நடராஜ பெருமான் அழகு ததும்பக் காட்சி தருகிறார். ஒவ்வொரு மண்டபமும் மண்டபத்தின் தூண்களின் சிற்ப நுட்பங்களை பறை சாற்றும் விதமாகத் திகழ்கின்றன.

இந்தத் திருத்தலத்தில், கோயிலின் வெளிப்பிராகாரத்தில், முருகபெருமான் தனிக்கோயில் போல் அழகுற அமைந்திருக்கிறார். முருகப்பெருமானின் திருநாமம் -ஸ்ரீபால தண்டாயுதபாணி. இந்த சந்நிதிக்கு வந்து, முருகப்பெருமானை கண் குளிரத் தரிசித்து திருப்புகழ் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.

பதினெட்டு சித்தர் பெருமக்களில் கோரக்க முனிவர், இந்தக் கோயிலில் அமைந்திருக்கும், இன்றைக்கும் நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் பால தண்டாயுதபாணியை பிரதிஷ்டைசெய்து கடும் தவம் மேற்கொண்டுள்ளார் என்கிறது ஸ்தல புராணம்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியம்பதியில், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். இதையடுத்து மேற்கு பார்த்த நிலையில் பேரூர் கோயிலில் தரிசனம் தந்தருள்கிறார் பால தண்டாயுதபாணி. இப்படி மேற்குப் பார்த்த நிலையில் உள்ள முருகக் கடவுளைத் தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். விடியலைத் தந்திடுவார் முருகக் கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள், ரொம்பவே விசேஷமானது என்கிறார்கள் பக்தர்கள். இந்த நாளில், பேரூர் பால தண்டாயுதபாணிப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.

கிருத்திகை நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு, பேரூர் முருகப்பெருமானை தரிசித்தால், திருமண பாக்கியம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள். அதேபோல், திருமணமான பெண்கள் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பாலதண்டாயுதபாணியை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போல் மாதந்தோறும் வருகிற எல்லா கிருத்திகை நட்சத்திர நாளும் இங்கே விசேஷம் தான். கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பேரூர் முருகனை வணங்குங்கள். பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் பால தண்டாயுதபாணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x