

குரு வார சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், ஆனைமுகத்தானை வணங்கி வழிபடுவோம். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார். நம் வாழ்வில் சந்தோஷங்களையெல்லாம் பெருக்கித் தருவார். இன்று டிசம்பர் 3ம் தேதி வியாழக்கிழமை சங்கடஹர சதுர்த்தி.
எந்தக் கடவுளை வணங்கத் தொடங்கினாலும், பூஜைகள் செய்ய ஆரம்பித்தாலும் முதலில் நாம் எல்லோரும் வணங்குவது பிள்ளையாரைத்தான். வீட்டில் எந்த வழிபாடுகளைச் செய்தாலும் முதலில், கணபதியைத் தொழுதுவிட்டுத்தான் பூஜையையோ வழிபாட்டையோ ஹோமத்தையோ தொடங்குவோம்.
அதனால்தான் விநாயகப் பெருமானை முழு முதற்கடவுள் என்று போற்றுகிறோம். கணபதி என்று வணங்குகிறோம். கணங்கள் அனைத்துக்கும் அதிபதி என்பதால், கணபதி எனும் திருநாமம் அமையப்பெற்றது.
அப்பேர்ப்பட்ட விநாயகப் பெருமானை வழிபடுவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. அதனால்தான், ஆற்றில் குளித்துவிட்டு கரையேறியதுமே, அரசமரத்தடியிலோ ஆலமரத்தடியிலோ பிள்ளையார் வீற்றிருப்பார்.
அதேபோல், ஆலயங்களில் நுழைந்ததுமே நாம் முதலில் பிள்ளையாரப்பனின் சந்நிதியைத்தான் தரிசிப்போம். விநாயகப் பெருமானைத்தான் வேண்டுவோம்.
ஒரு மஞ்சளை எடுத்து பிள்ளையார் என்று மனதார நினைத்துப் பிடித்து வைத்தாலே அங்கே... அதில் பிள்ளையார் வந்து உட்கார்ந்துகொள்கிறார் என்றும் அருளுகிறார் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.
மாதந்தோறும் பெளர்ணமியை அடுத்து வருகிற நான்காம் நாள் சதுர்த்தசி சங்கடஹர சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமானுக்கு உகந்தநாள் என்று வழிபடப்படுகிறது.
இன்று டிசம்பர் 3ம் தேதி சங்கடஹர சதுர்த்தி. வியாழக்கிழமையை குரு வாரம் என்று போற்றுகிறோம். குருவார வியாழக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம்.
மாலையில் வீட்டில் உள்ள விநாயகப் பெருமானின் படத்துக்கோ சிலைக்கோ பூக்களிட்டு அலங்கரிப்போம். அருகம்புல் மாலை சார்த்துவோம். வெள்ளெருக்கு மாலை அணிவித்து வழிபடுவோம்.
அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனை மனதார வழிபடுவோம். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் பிள்ளையாரப்பன். சிக்கல்களையெல்லாம் போக்கி சந்தோஷத்தைத் தந்திடுவார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.