Last Updated : 30 Nov, 2020 08:04 PM

 

Published : 30 Nov 2020 08:04 PM
Last Updated : 30 Nov 2020 08:04 PM

’உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்!’ - என்கிறார் பகவான் சாயிபாபா

‘உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன். அனைத்தையும் மன்னித்து உன்னை ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறேன்’ என்கிறார் பகவான் சாயிபாபா.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் பகவான் சாயிபாபா. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எவராக இருந்தாலும் ‘பாபா’ என்று ஒருமுறை ஒரேயொரு முறை அழைத்தாலே போதும், அவர்களுக்கு தன் அருளை அள்ளித் தரும் அன்னையெனத் திகழ்கிறார் சாயிபாபா என்று பூரிப்பும் சிலிர்ப்புமாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

மனிதப் பிறப்பு என்பதே கர்மவினைகளைத் தொலைப்பதற்காகவும் கழிப்பதற்காகவும்தான். அந்த வினைகளைத் தொலைப்பது என்பது போக்குவது என்பது விரல் சொடுக்குகிற நேரத்தில் நிகழ்ந்துவிடாது. பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அதனால்தான் என் குழந்தைகளாகிய உங்களுக்கு எப்போதும் பொறுமையுடன் இருங்கள். நிதானத்தைக் கைக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன் என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.

’பொறுமையும் தன்னம்பிக்கையும் தான் தைரியம். அதை நீ தொலைத்து விடாதே.இழந்துவிடாதே. உன் கர்மாவை உன் நண்பனோ மனைவியோ தொலைக்கமுடியாது. நீதான் அவற்றை அனுபவிக்கவேண்டும். அந்த கர்மவினைகளைக் கழிப்பதற்கு நான் ஒத்தாசையாக இருப்பேன்’ என்கிறார் சாயிபாபா.

எளிய முறைகளையும் வழிகளையும் இனிதே சொல்லிக் கொடுத்ததால்தான் பாபாவைப் போற்றுகின்றனர் பக்தர்கள். அதனால்தான் இந்தியா முழுவதும் சாயிபாபாவுக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஷீர்டி மட்டுமின்றி பல ஊர்களிலும் பாபாவுக்கு கோயில்களும் வழிபாடுகளும் அமர்க்களப்படுகின்றன.

’எது நடந்தாலும் நீ என்ன செய்திருந்தாலும் அவற்றையெல்லாம் நீ உணரும் தருணத்தில், நான் அனைத்தையும் மன்னித்து உன்னை ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறேன். எல்லாம் புரிந்து உணர்ந்து தெளிந்து வரும் தருணத்துக்காக, உனக்காக, உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்’ என்று தன் பக்தர்களிடம் அருளியுள்ளார் ஷீர்டி நாதனான சாயிபாபா.

‘சக உயிர்களிடம் பாசமும் பிரியமும் கொண்டு நீ இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மற்றபடி எனக்கு ஆசையோ விருப்பமோ ஏதுமில்லை. நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பது ஒன்றே என்னுடைய ஆசை. என்னுடைய விருப்பம். சக உயிர்களிடம் எவரெல்லாம் நேசத்துடன் இருக்கிறீர்களோ, அவர்களின் வருகைக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் அவர்களின் வம்சத்தையும் காப்பதற்கு காத்தருள்வதற்கு, நான் தயாராக இருக்கிறேன்.

‘என்னுடைய நாமத்தை நீங்கள் எப்போது சொன்னாலும் என்னிடம் வருவதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்பதை நான் உணர்ந்துகொள்வேன். அது என்னுடைய நாமம் அல்ல. இறைவனின் நாமம். உங்களுடைய நாமம். நான் வேறு, இறைவன் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதே இல்லை’ என்கிறார் சாயிபாபா.
அருகில் உள்ள மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள். அருகில் உள்ள பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். சக மனிதர்களிடம் நாம் காட்டுகிற அன்பும் பாபாவிடம் நாம் செலுத்துகிற பக்தியும்தான் பாபாவின் பேரருளை நமக்கு பெற்றுத் தரும்.

நம் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் பகவான் சாயிபாபா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x