Published : 30 Nov 2020 15:44 pm

Updated : 30 Nov 2020 15:44 pm

 

Published : 30 Nov 2020 03:44 PM
Last Updated : 30 Nov 2020 03:44 PM

ஜபம் செய்வதால் என்ன கிடைக்கும்? - சேஷாத்ரி சுவாமிகள் அருளுரைக்கு பாலகுமாரன் விளக்கம்

seshathiri-swamigal

ஜபம் செய்யுங்கள். ஜபம் செய்வதால் பலன்கள் உண்டு என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறது வேதம். ஆச்சார்யர்களும் ஜபம் குறித்தும் ஜப பலன்கள் குறித்தும் அறுவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான் சேஷாத்ரி சுவாமிகள். முக்தி அடைந்தும் இன்றைக்கும் தன் பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கும் அற்புதமகான்.
சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை ‘தங்கக்கை’ எனும் தலைப்பில், நாவலாக, கதையாக, சேஷாத்ரி சுவாமிகளின் சரிதமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.
தன்னுடைய நாவலில், சேஷாத்ரி சுவாமிகள் ஜபம் குறித்து எடுத்துரைத்ததை விளக்குகிறார்.


ஜபம் செய்தால் என்ன கிடைக்கும்? என்பதுதான் நம் எல்லோரின் கேள்வியும்.

திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் வாழ்க்கையில் ஒரு நாள்...

’ஜபம் பண்ணி என்ன கிடைச்சுது ?’

சேஷாத்ரி சுவாமிகள் சொல்கிறார் --

’’எனக்கு என்ன கிடைச்சுதுங்கறது முக்கியமில்லடா. நான் ஒரு பொருட்டில்லை. என்ன கிடைக்கும்னு கேள். படிப்படியா விளக்கிச் சொல்றேன்.
தினம் ஒருமணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம் அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு.
காலைல ரெண்டு மணிநேரம், சாயந்தரம் ரெண்டு மணிநேரம் பண்ணினா காதில் இனிமையான சங்கீதம் கேட்கும்.

உடம்பு இறகுபோல லேசா இருக்கும். நோய் உபத்திரவாதங்கள் இருக்காது. உணவு கவனமா சாப்பிடத் தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது. உணவு குறைஞ்சு உள்ளம் பலமாயிடும் ! கார்த்தாலே மூன்று மணிநேரம், சாயந்தரம் மூன்று மணிநேரம் ஜபம் பண்ணினா, முகத்துல மாறுதல் உண்டாகும். கண் கூர்மையாகும்.

உடம்பிலே இருந்து தேஜஸ் விசிறி விசிறி அடிக்கும். நாம் சொல்லும் வாக்கு பலிக்கும்.

எட்டு மணிநேரம் ஜபம் பண்ணினா, நீ வேற மந்திரம் வேற இல்ல. நீயே மந்திரமா மாறிடலாம். அதற்கப்புறம் நடக்கறதெல்லாம் ஆனந்தக் குதியல் தான்.

எதைப் பார்த்தாலும் சந்தோஷம் தான். பசிக்காது. தூக்கம் வராது. யாரையும் அடையாளம் தெரியாது. மனசு கட்டுலேயிருந்து விடுபட்டு ஸ்வாமி கிட்ட நெருக்கமா போயிடலாம். அப்புறம் அதுவே உன்னை இழுத்துண்டு போயிடும். இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய, அந்த சக்தியே கூட்டிண்டு போயிடும்.

நீ உன்னோட கட்டுப்பாட்டில் இருக்கமாட்டே. முழுக்க முழுக்க சுவாமிகிட்ட சரணாகதி ஆயிடுவே. அப்ப நீ என்ன கேட்டாலும் கிடைக்கும். இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமோ ? உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும் பகவானா பார்த்து பார்த்துக் கொடுப்பார். உன் வார்த்தையெல்லாம் கடவுளுடைய வார்த்தை. உன் செய்கையெல்லாம் கடவுளுடைய செய்கை" என்றார் சேஷாத்ரி சுவாமிகள்.

" எட்டு மணிநேர ஜபத்துக்கப்புறம் என்ன ?’’

’’எல்லா நேரமும் ஜபம் பண்ணனும்னு தோணிடும். எட்டு -இருபத்தி நாலா மாறிடும். அதுல இன்னும் உக்கிரம் வந்துடும்.. மந்த்ர ஜபம் என்பது கற்றுக் கொள்வதில் இல்லை. பூஜை என்பது சொல்லித்தந்து செய்வது அல்ல. உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து அதற்குள் தானே மயங்கிச் சரிதல் வேண்டும். சடங்காக செய்கிறபோதும், எதிர்பார்த்து உட்காரும் போதும் செய்கிற விஷயத்தின் வீரியம் குறைகிறது.

ஸ்வாசம் போல இயல்பாக மாறிய செயல் தான் உன்னத ஆன்ம நிலைக்கு அழைத்துச் செல்கிறது’’ என்று சேஷாத்ரி சுவாமிகள் அருளியதை எழுத்தாளர் பாலகுமாரன் தன் நாவலில் விளக்கியுள்ளார்.

திருவண்ணாலை என்பது புண்ணிய பூமி. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் இது. இங்கே, அண்ணாமலையாரும் விசேஷம். மலையும் பரமானந்தம். கிரிவலம் செல்லும் பாதையில், சேஷாத்ரி சுவாமிகளுக்கும் ரமணருக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கும் ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. இங்கே, ஒரு பத்துநிமிடங்கள் கண்கள் மூடி அமர்ந்து தியானத்திலும் வழிபாட்டிலும் ஜபத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடுங்கள். சகல பிரார்த்தனைகளும் சகலருக்காகவும் வைக்கப்படுகிற வேண்டுதல்களும் நிறைவேறும் என்கிறார்கள் மகான்கள்!


தவறவிடாதீர்!ஜபம் செய்வதால் என்ன கிடைக்கும்? - சேஷாத்ரி சுவாமிகள் அருளுரைக்கு பாலகுமாரன் விளக்கம்சேஷாத்ரி சுவாமிகள்தங்கக்கை நாவல்எழுத்தாளர் பாலகுமாரன்திருவண்ணாமலைதிருவண்ணாமலை கிரிவலம்அண்ணாமலையார்ரமணர்ரமணாஸ்ரமம்பகவான் யோகி ராம்சுரத்குமார்ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்விசிறி சாமியார்பாலகுமாரன்நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைTiruvannamalaiBalakumaranSeshathri swamigalRamana magarishiYogi ramsuratkumarWriter balakumaranThangakkai novelஜபம்ஜபம் செய்வதால் என்ன கிடைக்கும்?

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x