

சென்னையில் உள்ள சிவாலயங்களில் புராணப் புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலங்களில் திருவொற்றியூர் திருத்தலமும் ஒன்று. சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட அற்புதமான திருத்தலம் இது.
சென்னை திருவொற்றியூர் திருத்தலத்தின் நாயகன் தியாகராஜ பெருமான். அம்பாளின் திருநாமம் வடிவுடையம்மன். ஆகவே இந்தக் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் என்றும் வடிவுடையம்மன் கோயில் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அதேபோல், திருவொற்றியூர் சிவனாருக்கு ஆதிபுரீஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு என்பதால் ஆதிபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது இந்த ஆலயம்.
எல்லா சிவாலயங்களைப் போலவே, கார்த்திகை மாதத்தின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கேயேயும்... இந்தத் தலத்திலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இன்னொரு சிறப்பு... வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பு... திருவொற்றியூர் திருத்தலத்துக்கு உண்டு. வருடந்தோறும் கார்த்திகை மாத பெளர்ணமி நன்னாளில், ஆதிபூரீஸ்வரருக்கு புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். அதாவது சுயம்பு மூர்த்தமான ஆதிபுரீஸ்வரரை கவசங்கள் ஏதுமில்லாமல் தைலாபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.
இந்த மாதம் கார்த்திகை மாதம். இன்று 29ம் தேதி திருக்கார்த்திகை நட்சத்திரம். இன்று பெளர்ணமித் திருநாள். இந்த அற்புத நாளில் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது.
இன்று 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 முதல் 7 மணிக்குள் ஆதிபுரீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அடுத்து புனுகு சாம்பிராணி கொண்டு, தைலாபிஷேகம் நடைபெறும்.
வருடந்தோறும் ஆதிபுரீஸ்வரரை தரிசிக்கலாம் என்றாலும் கவசம் அணிந்த நிலையிலான ஆதிபுரீஸ்வரரைத்தான் தரிசிக்க இயலும். ஆனால் கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி தினமான இன்று கவசமில்லாத தைலாபிஷேகம் செய்த நிலையில் இருக்கிற ஆதிபுரீஸ்வரரை தரிசிக்கலாம்.
29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மூன்று நாட்களுக்கு இப்படியான தரிசனம் நமக்குக் கிடைப்பது என்பது வாழ்வில், இந்தப் பிறவியில் நம்முடைய பாக்கியம். இன்று மாலை தொடங்கி 30ம் தேதி திங்கட்கிழமை காலை 6 முதல் இரவு 8 மணி வரையும் அதற்கு அடுத்தநாள் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் இரவு 8 மணி வரையும் கோயிலின் நடை திறந்திருக்கும். பக்தர்கள் இந்த மூன்று நாளிலும் ஆதிபுரீஸ்வரரை கண்ணாரத் தரிசிக்கலாம்.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரின் தைலாபிஷேக தரிசனம் காண்போம். கண்குளிர சிவனாரை தரிசிப்போம். நம் கவலைகளையும் இன்னல்களையும் தீர்த்துவைப்பான் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்.