மங்கலம் பொங்கும் திருச்சிறுகுடி

மங்கலம் பொங்கும் திருச்சிறுகுடி
Updated on
1 min read

சுவாமி, அம்பாள், தீர்த்தம், விமானம் என்று எல்லாவற்றிலும் மங்கலம் பொங்கும் புனிதத் திருத்தலம் திருச்சிறுகுடி. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் ராகு, கேது இரண்டுக்குமான தலமாகப் போற்றி வணங்கப்படும் திருப்பாம்புரத்துக்கு அருகில் இருக்கிறது இந்த திருச்சிறுகுடி.

பரந்த பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்திருக்க நடுவில் இதமான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். கர்ப்பக்கிரகத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார் இறைவன். தெற்கு நோக்கிய தனிச்சன்னதியில் அம்பாள் வீற்றிருக்கிறார். இங்குள்ள இறைவன் பெயர் சூட்சுமபுரீஸ்வரர். ஆனால் அவருக்கு பக்தர்களிடம் விளங்கும் நாமம் மங்களபுரீஸ்வர் என்பதாகும். அம்பாள் பெயர் மங்களாம்பாள். ஆலய விமானத்துக்குப் பெயர் மங்கல விமானம்.

இங்குள்ள தீர்த்தத்திற்கு மங்கல தீர்த்தம் என்று பெயர். இங்கே அடியெடுத்து வைத்தால் போதும், அனைத்துத் துன்பங்களும் தூர விலகி அவர்களின் நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக மங்கலகாரகனான செவ்வாய்க்கு இங்கு தனிசந்நிதி உள்ளது. இத்தலம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமைக்குரியது. திருமுக்கால் எனப்படும் இப்பாடல் திருப்புகழ் பாடல்களை ஒத்த சந்தத்துக்குரியது.

அதிசய எந்திரம்

மகாமண்டபத்தின் தென்புற வெளிச்சுவற்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்று பல ரகசியங்களை உள்ளடக்கியதாகவும், பிற்கால எந்திரங்களுக்கு முன்னோடியானதாகவும் கருதப்படுகிறது.

சுமார் ஒரு அடி அளவிலான சதுரக் கட்டம் ஒன்று 16 சிறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அதில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களை மேல், கீழாகவோ, இடமிருந்து வலமாகவோ, மூலையில் இருந்து எதிர் மூலையாகவோ எப்படிக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 40 வருமாறு அமைந்துள்ளது. ஜாதகக் கட்டங்கள் போல இவை இருப்பதால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்க, இப்படி சூட்சுமமாக எண்களைப் பயன்படுத்தி எந்திரம் உருவாக்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஜாதகக் கோளாறுகளைச் சரிசெய்ய எந்திரங்கள் தயாரித்து பூஜை செய்யப்படும் வழக்கத்துக்கு இது முன்னோடியாக இருந்திருக்கலாம்.

இந்து ஆலயங்களில் சக்ரம் போல, பலவித சக்கரங்கள் மந்திர பூர்வமானதாகப் போற்றப் படுகின்றன. ஆலயங்களில் மூர்த்திகளுக்குக் கீழே சக்கரங்கள் பொறிக்கப்பட்ட எந்திரங்களை பிரதிஷ்டை செய்யும் வழக்கம் தற்போதுவரையிலும் நடைமுறையில் உள்ளது. பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில் பஞ்சாட்சர மந்திரம் பலப்பல வடிவங்களில் கட்டங்களாகவும், மந்திரச் சக்கரங் களாகவும் காணப்படுகிறது. இத்தகைய சக்கர பிரதிஷ்டை தமிழக் கோயில்களில் கல்வெட்டாகக் காணக் கிடைப்பது மிக அரிதான ஒன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in