Last Updated : 27 Nov, 2020 01:02 PM

 

Published : 27 Nov 2020 01:02 PM
Last Updated : 27 Nov 2020 01:02 PM

குபேர யோகம் தரும் திருவாப்புடையார்! 

செல்லூர் திருவாப்புடையார் ஆலயத்துக்கு வந்து திருவாப்புடையாரை தரிசித்து வேண்டிக்கொண்டால், சகல செல்வங்களையும் தந்தருள்வார் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். திருக்கார்த்திகை நன்னாளில், திருவாப்புடையாரைத் தரிசித்தால், குபேர யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்கே உள்ள செல்லூர் எனும் பகுதியில் கோயில்கொண்டிருக்கிறார் திருவாப்புடையார். வைகைக் கரைக்கு அருகில் கோயில் கொண்டிருக்கிறார். தன்னை நாடி வருவோர்க்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் திருவாப்புடையார்.

புராதன - புராணப் பெருமைகள் கொண்ட திருத்தலம் இது.

பாண்டிய மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தர். ஒருநாள்கூட, சிவபூஜை செய்யாமல் அவர் சாப்பிடவே மாட்டார். ஒருநாள், வேட்டையாட வனத்துக்குச் சென்றவர், அங்கே ஒரு மானைக் கண்டு அதன்மீது அம்பு தொடுத்தார். ஆனால், அந்த மான்... அம்புக்கு அகப்படாமல் தப்பி ஓடியது. மானை விரட்டியபடி பின்தொடர்ந்தார் மன்னர். ஆனாலும் அவரால் மானைப் பிடிக்கமுடியவில்லை. பிறகு, களைப்பில் மூச்சு வாங்கத் தவித்து இளைப்பாறினார். உணவு எடுத்துக் கொள்ளும் படி தெரிவித்தனர் அமைச்சர்கள்.
ஆனால் மன்னரோ, ‘சிவ பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன்’ என்பதில் உறுதியாக இருந்தார். பசியின் காரணமாக களைப்பும் மயக்கமும் அடைந்தார். செய்வதறியாது அமைச்சர்கள் தவிக்க, தளபதிக்குச் சட்டென்று ஒரு யோசனை வந்தது.

மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஊன்றினார். அது நிலத்தில் அழுத்தமாகப் பதிந்து நின்றது. ‘மன்னா, அதோ பாருங்கள், சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார் சிவனார்!’ என்று சொல்ல... அதைக் கண்டு பரவசமான மன்னர், அந்த மரத்துண்டை லிங்கமூர்த்தம் என்று நினைத்து, மனம் ஒன்றிப் பூஜைகள் செய்தார். பிறகு, உணவருந்தினார்.

அதையடுத்து, சகஜ நிலைக்கு வந்த மன்னர், அவர் பூஜை செய்த இடத்தைப் பார்த்துவிட்டு, ‘என்ன இது... மரத்துண்டு போல் அல்லவா இருக்கிறது?’ என்று அதிர்ந்து போனார். பின்னர், ‘மரத்துண்டாக இருந்தால் என்ன... என் சிவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான். இதோ.. இதிலும் இருக்கிறான். இத்தனை காலமும் நான் செய்த பூஜைகள் உண்மையெனில், ஆத்மார்த்தமாக செய்ததை நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய் எனில், இதோ... இந்த மரத்துண்டில் எழுந்தருளி, காட்சி தருவாயாக!’ என்று பிரார்த்தித்தார்.

மன்னரின் பிரார்த்தனை பலித்தது. மரத்துண்டில் லிங்க மூர்த்தமாகக் காட்சி தந்தார் இறைவன். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். ஆனந்தத்தில் கண்ணீர் மல்க, சிரசில் கைகுவித்து வணங்கினார். அந்த இடத்தில், அழகிய ஆலயத்தை எழுப்பினார்.

அதையடுத்து, கோயிலைச் சுற்றி மக்களும் குடியேறினார்கள். மண்ணில் ஆப்பு அடித்ததுபோல் அழுத்தமாக நின்ற மரத் துண்டு லிங்க மூர்த்தமாகக் காட்சியளித்த இடம்... ஆப்பனூர் என்றே அழைக்கப்பட்டது. சிவனின் பெயர் திருவாப்புடையார் என்றானது.

மதுரையம்பதியின் பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. மதுரையில் சம்பந்தர் பெருமான் பாடிய 2-வது தலம் என்று கொண்டாடப்படுகிறது. பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 4-வது கோயில் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

மலை மேரு, பசுக்களில் காமதேனு, மேகம் என இருப்பதைவிட அளவிற் பெரிய திருவுளம் கொண்டவர் திருவாப்புடையார் என்கிறது புராணம். இவரைத் தரிசித்தால், மற்ற அனைத்துப் புண்ணிய தலங்களின் மூர்த்திகளைத் தரிசித்த பலன் உண்டு என்கிறது ஸ்தல புராணம்.

அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை.இந்தத் தலத்தில்... ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநடராஜர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். ஸ்தல தீர்த்தம் இடப தீர்த்தம். ஸ்தல விருட்சம்- கொன்றை மரம்.

ஐப்பசி அன்னாபிஷேகம் இங்கே விசேஷம். பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சார்த்துவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என அணிந்தபடி காட்சி தரும் லிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவார்கள்.

அதேபோல், மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருநாளில் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும். ஞானமும் யோகமும் பெறலாம். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பமும் ஒற்றுமையின்மையும் மாறும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x