Last Updated : 27 Nov, 2020 11:29 AM

 

Published : 27 Nov 2020 11:29 AM
Last Updated : 27 Nov 2020 11:29 AM

சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம்


சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம் இன்று (27ம் தேதி வெள்ளிக்கிழமை). இந்த அற்புத நாளில், சிவபெருமானையும் நந்தியெம்பெருமானையும் கண் குளிரத் தரிசித்து மனதாரப் பிரார்த்திப்போம். சுபிட்சம் அனைத்தும் தந்தருள்வார் ஈசன்.

தென்னாடுடைய சிவனாருக்கு உரிய தினங்கள் என்றும் விசேஷ பூஜைகள் என்றும் எத்தனையோ நாட்களும் விசேஷங்களும் இருக்கின்றன. சிவபெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை. மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாளில், சிவனாருக்கு விரதம் மேற்கொண்டு பூஜிப்பார்கள் பக்தர்கள்.

அதேபோல், மாதந்தோறும் வருகிற சிவராத்திரி நன்னாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்வார்கள்.

இதேபோல், சிவபெருமானுக்கு இன்னும் இன்னுமாக விசேஷங்களும் விரதங்களும் உண்டு என்றாலும் சிவனாருக்கு உரிய மிக முக்கியமான நாள் பிரதோஷ தினம் என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் வருவது பிரதோஷம். பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாம் நாளும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் வருகிற திரயோதசி திதி என்பது பிரதோஷ வழிபாட்டுக்கான நாள்.

இந்தநாளில், சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறும். பிரதோஷம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம். எனவே இந்த வேளையில், சிவாலயங்களில் உள்ள நந்திக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் விசேஷ பூஜைகள் அமர்க்களப்படும்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். இன்று வெள்ளிக்கிழமை. இன்று 27ம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷம். அற்புதமான இந்த நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவரை வணங்குங்கள். சிவலிங்கத் திருமேனியை கண் குளிர தரிசியுங்கள்.

அபிஷேகப் பிரியன் சிவபெருமான். இன்று பிரதோஷநாளில் சிவனாருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். சுபிட்சம் அனைத்தையும் தந்தருள்வார் தென்னாடுடைய சிவனார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x