Published : 26 Nov 2020 05:28 PM
Last Updated : 26 Nov 2020 05:28 PM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வஸ்திர மரியாதை 

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் இணை ஆணையர் பொன். ஜெயராமனிடம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் ஜவகர் ரெட்டி வழங்கினார்.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

கி.பி.1320-ம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் நடந்த முஸ்லிம் படையெடுப்பின்போது ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரான நம்பெருமாள் திருப்பதி திருமலை கோயிலில் வைத்துப் பாதுகாக்கப்பட்டார்.

அவ்வாறு நம்பெருமாள் வைக்கப்பட்டிருந்த மண்டபம், திருமலை கோயிலில் ரங்கநாயகலு மண்டம் என்ற பெயரில் இன்றும் உள்ளது. இந்த மண்டபத்தில் கோயிலின் முக்கியமான நிகழ்வுகள் இன்றும் நடைபெறுகின்றன.

திருமலைக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கலப் பொருட்கள் பரிவர்த்தனைகள் இருந்து வந்தன. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கைசிக ஏகாதசி விழா இன்று (நவ. 26) நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ரங்கநாச்சியார் மற்றும் ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திரங்கள், குடைகள் மற்றும் மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் ஜவகர் ரெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று (நவ. 25) இரவு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் இன்று வஸ்திர மரியாதை பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்களுடன் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் ஜவகர் ரெட்டி மங்கலப் பொருட்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமனிடம் வழங்கினார். அப்போது அறங்காவலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x