

மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து. இந்த தசாவதாரங்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு விதமான சிந்தனையையும் நெறியையும் அறிவுறுத்துகின்றன. பக்தியை மேம்படுத்தச் செய்கின்றன. இறை நாமத்தைச் சொல்லுவதையும் கடவுள் மீது மாறா பக்தி கொண்டிருப்பதையும் நமக்கு போதிக்கின்றன.
இந்த அவதாரங்களில் ஒன்றுதான் நரசிம்ம அவதாரம். இருப்பதிலேயே சில மணி நேரங்கள் மட்டுமே அவதாரம் நிகழ்ந்ததென்றால், அது நரசிம்ம அவதாரம் மட்டுமே.
இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உணர்த்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். உண்மையான பக்தி இருந்தால், சிறியவர் பெரியவர் பேதமின்றி இறைவன் பிரத்யட்சமாக வருவான். காட்சி அளிப்பான் என்பதை உலகத்துக்கும் உலகத்து மக்களுக்கும் உணர்த்தியதே நரசிம்ம அவதாரம்.
நரசிம்மர், உக்கிரமானவர். உக்கிர தெய்வங்களை கர்மசிரத்தையாக, ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நரசிம்மருக்கு தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. உக்கிர நரசிம்மரை, யோக நரசிம்மரை பானக நைவேத்தியம் செய்து வணங்கி வழிபட்டு வந்தால், எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும் என்பது ஐதீகம்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் நரசிம்மர் விசேஷமானவர். தாம்பரம் - செங்கல்பட்டு சாலையில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில், கோயில் கொண்டிருக்கும் நரசிம்மரும் சாந்நித்தியம் நிறைந்து அருள் மழை பொழிந்துகொண்டிருக்கிறார்.
நரசிம்மர் அவதரித்த தருணம் என்பது ஒரு பிரதோஷ காலம். அதாவது மாலை 4.30 முதல் 6 மணிக்குள். பிரதோஷ நேரத்தில் அவதாரம் நிகழ்ந்ததால், சிவனாருக்கு பிரதோஷம் விசேஷம் என்பது போலவே நரசிம்மருக்கும் பிரதோஷ நாளில் விசேஷமாக பூஜைகள் செய்யப்படுகின்றன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பகவான் ஸ்ரீநரசிம்ம காயத்ரி சொல்லி பாராயணம் செய்து நரசிங்க பெருமாளை வேண்டுங்கள். வேண்டிய வரங்களைத் தந்திடுவார். நினைத்த காரியங்களை நடத்த துணை புரிவார். எதிரிகளை இல்லாது செய்வார். எதிர்ப்புகளை பலமிழக்கச் செய்வார்.
ஸ்ரீநரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்
என்கிற நரசிம்ம மூர்த்தத்தின் காயத்ரியை மனதாரச் சொல்லி வழிபடுங்கள். புதன் கிழமைகளில் வழிபட்டு, பானக நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். அல்லல்களையெல்லாம் போக்கியருளுவார் நரசிம்ம மூர்த்தி.