

’எனக்கு நீ விருப்பத்துடன் படைக்கும் அனைத்தையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல், நீ என்னிடம் கேட்டதையும் சந்தோஷமாகக் கொடுத்து என் பிள்ளைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
பகவான் சாயிபாபா, மண்ணுலகில் உதித்த அற்புத மகான்களில் ஒருவர். வடக்கே ஷீர்டி எனும் கிராமத்தில் அவதரித்து, அந்தக் கிராமத்தை நகரமாக்கிய மகா முனிவர் . சின்னஞ்சிறிய கிராமத்தை புண்ணிய பூமியாக்கி, உலகெங்கும் உள்ள மக்களுக்கு அருள் மழை பொழியும் கருணை மனம் கொண்டவர் என்றெல்லாம் பாபாவைப் புகழ்கின்றனர் பக்தர்கள். போற்றுகின்றனர். வழிபடுகின்றனர்.
பகவான் பாபா, தான் வாழும் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார். தன் அருளாலும் அருளாடல்களாலும் எத்தனையோ மக்களை கடைத்தேற்றியிருக்கிறார். அன்புடனும் கருணையுடனும் எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டுங்கள். அவைதான் இறையை, இறைவனை, இறை சக்தியை நீங்கள் உணரும் தருணம் என்கிறார் பகவான் பாபா.
சக மனிதர்களிடம் நாம் செலுத்துகிற அன்பும் கரிசனமும் தான் இறைவனின் அருளைப் பெறுவதற்கான வழி என்பதை தொடர்ந்து வலியுறுத்தியபடியே இருந்தார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
அதனால்தான் ஷீர்டி எனும் புண்ணிய திருத்தலத்தில், ஷீர்டியில் உள்ள ஆஸ்ரமத்தில் எப்போதும் அன்னதானம் நிகழ்ந்துகொண்டே இருக்கச் செய்தார் பாபா. அது இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஷீர்டி பகவான் சாயிபாபா, தன் பக்தர்கள் எல்லோருக்கும் உதவுபவர்களாக இருக்கவேண்டும் என்பதையே விரும்புகிறார்.
‘எனக்கு நீங்கள் விருப்பத்துடன் படைக்கும் அனைத்தையும் சந்தோஷமாக நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறருக்கு கொடுக்கும் போது என் பெயரை மனதுக்குள் சொல்லிவிட்டு, யாருக்கு வேண்டுமானாலும் வழங்குங்கள். அவையெல்லாம் எனக்கு வழங்கியதாகவே நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல், நீங்கள் என்னிடம் என்னென்ன கேட்டீர்களோ, அவற்றையும் மகிழ்ச்சி பொங்க உங்களுக்கு வழங்குகிறேன். நீங்கள் என் பிள்ளைகள். என் குழந்தைகளுக்கு நான் வழங்கினால், அவையெல்லாம் எனக்குத்தானே மகிழ்ச்சியும் சந்தோஷமும்.
ஆகவே, நீங்கள் இல்லாதவர்களுக்கு என் பெயரை உச்சரித்து வழங்குங்கள். என் குழந்தைகள் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறேன்’ என அருளியுள்ளார் பகவான் ஷீர்டி சாயிபாபா.