

சாந்நித்தியம் மிக்க சங்காபிஷேக தரிசனம் செய்யுங்கள். நம் முந்தைய பிறவியில், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்பது உறுதி. சந்திர பலத்தைப் பெறலாம். சிவனருள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
சாபத்துக்கு ஆளாகி தவித்துக் கண்ணீர் விட்டான் சந்திரன். சிவமே கதியென்று அவரை சரணடைந்தான். சிவனாரை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். தவத்தின் பலனாக சந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சாப விமோசனம் அடைந்தான் என்கிறது புராணம்.
சந்திரனும் அவனுடைய 27 நட்சத்திர மனைவியரில் ஒருத்தியான ரோகிணியும் சேர்ந்துதான் சிவ பூஜையில் ஈடுபட்டார்கள். தன் கணவன் பழைய நிலைக்கு வரவேண்டுமே என்று ரோகிணியும் ஆழ்ந்த பக்தியுடன் சிவனாரை வேண்டினாள். கணவனின் சாபத்தைப் போக்க துணை புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.
அதுமட்டுமின்றி, சந்திரனின் ஒரு கலையை தன் சிரசில் சூடிக்கொண்டு, சந்திரனுக்கு இழந்த கெளரவத்தையும் தேஜஸையும் தந்தருளினார் சிவபெருமான். இதனால் சந்திரசேகர் எனும் திருநாமம் அமைந்தது சிவனாருக்கு. சோமன் என்றும் சோமேஸ்வரர் என்றும் சோமநாதர் என்றும் திருநாமங்கள் அமைந்தன.
சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். திங்கட்கிழமை என்பது சிவ வழிபாட்டுக்கு உரிய நாள் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஒவ்வொரு சோமவாரமும்... அதாவது வருடத்தில் அனைத்து மாதங்களிலும் வரக்கூடிய திங்கட்கிழமை என்பது சிவ வழிபாட்டுக்கும் சிவனாரை நினைத்து விரதம் மேற்கொள்வதற்குமானவை என்று சொல்லப்பட்டிருக்கின்றன. அதேசமயம் கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகள், சிவ விரதத்துக்கும் சிவ வழிபாட்டுக்கும் சிவ பூஜைக்கும் உகந்தவை என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
கார்த்திகை சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், வாரந்தோறும் சிவாலயங்களில், சங்காபிஷேகம் நடைபெறும். இதையொட்டி ஆலயங்களில் உத்ஸவ மூர்த்திகள் வீதியுலா வருவதும் காட்சி மண்டபங்களில் சர்வ அலங்காரத்துடன் திருக்காட்சி தருவதும் நடைபெறும். இந்தநாளில், சிவனாருக்கு யாகங்கள் நடைபெறும். ஹோம பூஜைகள் விமரிசையாக நடந்தேறும். அப்போது, 108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு, அவற்றில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வைத்து பூஜைகள் மேற்கொள்வார்கள். பின்னார், சங்கால் நிரப்பப்பட்ட நீரைக் கொண்டு, திருமுழுக்காட்டு எனப்படும் அபிஷேக ஆராதனைகளும் கோலாகலமாக நடைபெறும்.
கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் சிவனாருக்குச் செய்யப்படுகிற சங்காபிஷேக வைபவத்தை ஒருமுறை தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நம் வீட்டுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று சங்காபிஷேகத்தை கண் குளிரத் தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், சிவனாருக்கு வில்வம் வழங்குங்கள். வெண்மை நிற மலர்கள் வழங்குங்கள்.
சாந்நித்தியம் மிக்க சங்காபிஷேக தரிசனம் செய்யுங்கள். நம் முந்தைய பிறவியில், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்பது உறுதி. சந்திர பலத்தைப் பெறலாம். சிவனருள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!