கார்த்திகை சோம வாரத்தில்... சங்கடம் தீர்க்கும் சங்காபிஷேகம்

கார்த்திகை சோம வாரத்தில்... சங்கடம் தீர்க்கும் சங்காபிஷேகம்
Updated on
1 min read

கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். இந்த சங்காபிஷேக தரிசனம் நம் வாழ்வில் இதுவரை இருந்த சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு சோமவாரமும் சிவனாருக்கு மிகவும் விசேஷமான நாள். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். சோமன் என்று சோமேஸ்வரர் என்றும் இதனால்தான் சிவனாருக்கு திருநாமம் அமைந்தது. சோமன் என்றால், திங்கள் என்றால் சந்திரன். அந்த சந்திரனையே பிறையென சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

அதனால்தான், ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனாரை வணங்குவதும் வழிபடுவதும் மிகுந்த விசேஷமானது என்றும் வியக்கத்தக்க பலன்களை வழங்கவல்லது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், சனிக்கிழமை வருகிற பிரதோஷமும் திங்களன்று வருகிற பிரதோஷமும் மகத்தானவை. மும்மடங்கு பலன்களை வழங்குபவை என்றும் தெரிவிக்கிறார்கள்.
எந்த மாதமாக இருந்தாலும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, சிவனாருக்கு சிறப்பான நாள். சிவபெருமானை வழிபடுவதற்கு அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை என்பது இன்னும் விசேஷத்துக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது.

கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு என்றில்லாமல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடத்தப்படுகிற அற்புதமான பூஜை.

தமிழகத்தில் பெரும்பான்மையான சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரத்தில்... சிவனாருக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு சங்கு கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம், 1008 சங்கால் அபிஷேகம் என்றெல்லாம் நடைபெறுகிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி திருவானைக்காவல் கோயில், திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், தஞ்சை பெரியகோயில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் முதலான பெரும்பான்மையான சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.

கார்த்திகை மாதத்தின் சோம வார நன்னாளில், சோமநாதருக்கு சோமேஸ்வரருக்கு தென்னாடுடைய சிவனாருக்கு குளிரக் குளிர சங்கால் அபிஷேகம் நடைபெறுவதை கண்குளிரத் தரிசியுங்கள். கவலைகளெல்லாம் இனி பறந்தோடும். துக்கங்களெல்லாம் இனி களையப்படும். சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் சிவனார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in