Last Updated : 22 Nov, 2020 07:04 PM

 

Published : 22 Nov 2020 07:04 PM
Last Updated : 22 Nov 2020 07:04 PM

சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் கார்த்திகை மாத திருவிழா கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்; தினசரி கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை

கோயில் வளாகத்தில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.

சோளிங்கர்

சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கார்த்திகை மாத திருவிழா தற்போது தொடங்கியுள்ளது. தினசரி 900 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் தமிகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.

11 மாதங்கள் கண்மூடிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி, கார்த்திக்கை மாதம் 5 வாரங்களுக்கு கண் திறந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.

எனவே, கண் திறந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தரும் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமியை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாத திருவிழாவுக்காக சோளிங்கர் கோயிலுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பத்தால் கார்த்திகை மாத திருவிழாவுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். கரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தினசரி 900 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி, வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கார்த்திகை மாதம் திருவிழா கடந்த 16-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை காண கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கட்டுக்கு அடங்காத பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு வருவதால் அவர்களை கட்டுப்படுத்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. கடும் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கடந்த 2 நாட்களாக பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கார்த்திகை மாதம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமியை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று (நவ. 22) திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் ஏமாற்றமடைந்த சிலர் காவல் துறையினர் மற்றும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய நீண்ட தொலைவில் இருந்து வருவதால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x