Published : 22 Nov 2020 05:38 PM
Last Updated : 22 Nov 2020 05:38 PM

பைரவருக்கு விளக்கேற்றுங்கள்! 

பைரவரை அஷ்டமியில் விளக்கேற்றி வழிபடுங்கள். பயத்தையெல்லாம் போக்குவார். பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைப்பார்.

வழிபாடுகளில் மிக முக்கியமானது பைரவ வழிபாடு. பைரவர், எதிர்ப்புகளையெல்லாம் அழிக்கக் கூடியவர். இன்னல்களையெல்லாம் போக்கக்கூடியவர். தீயசக்திகளை அண்டவிடாமல் காத்தருளும் வீரியம் மிக்கவர் என்றெல்லாம் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

பைரவருக்கு உகந்தது அஷ்டமி திதி. முருகப்பெருமானுக்கு சஷ்டி திதி போல, பெருமாளுக்கு ஏகாதசி திதி போல பைரவருக்கு அஷ்டமி திதி நாள் மிகவும் உயர்ந்தது. உன்னதமானது என்கிறார்கள்.

தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமியில் பைரவரை வணங்குவதும் வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை என்றாலும் ஒவ்வொரு அஷ்டமியும் பைரவரை வணங்குவதற்கான நாள்தான். வழிபடுவதற்கு உரிய நாள்தான்.

கலியுகத்துக்கு காலபைரவர் என்று போற்றுவார்கள். காலபைரவர் உண்மைக்கும் நீதிக்கும் மதிப்பு தந்து காக்கும் கடவுள். அதனால்தான் இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பைரவரை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கும். கோஷ்டத்தைச் சுற்றி, பிராகார வலமாக வரும்போது, பைரவரைத் தரிசிக்கலாம். பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. மிளகு கலந்த வடை நைவேத்தியம் செய்வது உன்னதமானது. அதேபோல் தயிர்சாதம் விசேஷமானது.

இன்று 22ம் தேதி அஷ்டமி. மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். விளக்கேற்றி வழிபடுங்கள். பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைப்பார். நம் மனோபயத்தையெல்லாம் போக்கி அருளுவார் பைரவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x