இறைநேசர்களின் நினைவிடங்கள்: புலியைப் பணிய வைத்த ராவுத்தர் சாகிபு

இறைநேசர்களின் நினைவிடங்கள்: புலியைப் பணிய வைத்த ராவுத்தர் சாகிபு
Updated on
2 min read

புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் புகழ் சேர்க்கும் கோட்டைப்பட்டினத்தின் நாயகர் தான் இறைநேசர் ராவுத்தர் சாகிபு. முகம்மது ஷா வலியுல்லா என்றும் அழைக்கப்படும் அவர் 350 ஆண்டுகளுக்கு முன் மெய்ஞானத் தேடலிலும், சமயப் பணிகளிலும் ஈடுபட்டார்.

ராவுத்தர் சாகிபின் முன்னோர்கள் அரேபியாவைச் சேர்ந்தவர்கள் . பாட்டனார் சையிது அலிய்யுல் மதனீ, தமிழ்நாட்டுக்கு வந்து மதுரையில் சன்மார்க்கப் பணிபுரிந்தார். அவருடைய புதல்வர் சையிது அசீஸ் ஷேர்கான் படைத் தளபதியாகப் பதவி வகித்தார். அந்தத் தளபதியின் செல்வ மகனாக மதுரையில் பிறந்தவர்தான் ராவுத்தர் சாகிபு. அவருடைய இயற்பெயர் சையிது முகம்மது.

படைத் தளபதி அசீஸ் ஷேர்கான், ஒருமுறை போரிடச் சென்றபோது மதுரை ஜவுளி வியாபாரியிடம் மகனை ஒப்படைத்தார். சென்றவர் திரும்பி வரவில்லை. போர்க் களத்திலேயே உயிரிழந்துவிட்டார். பிள்ளப்பேறில்லாத ஜவுளி வியாபாரி, இராவுத்தர் சாகிபைத் தனது பிள்ளையாகவே எண்ணி வளர்த்தார்.

ராணுவத்திலிருந்து வீடு திரும்புதல்

வாலிப வயதைடைந்த ராவுத்தர் சாகிபு ராணுவத்தில் பணிபுரிய விரும்பினார். வளர்ப்புப் பெற்றோர் அனுமதியுடன் ராணுவத்தில் சேர்ந்து சிறப்பான விருதுகளைப்பெற்றார். பிறகு மதுரைக்குக்குத் திரும்பிய அவர் வளர்ப்புப் பெற்றோரைத் தேடினார். அவர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியும் பலனளிக்கவில்லை. பெற்றோரின் ஞாபகம் அலைக்கழிக்க, ஒரு குதிரையில் தொண்டி வழியாகக் கோட்டைப்பட்டினத்திற்கு வந்தார்.

கோட்டைப்பட்டினம் குச்சி மசூதிக்கு அருகில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டார். அந்தப் பகுதியைச் சேர்ந்த ராவுத்தர்கள் கருவாடு விற்பனை செய்தனர். அந்தத் தொழிலில் அவரும் ஈடுபட்டதால் ராவுத்தர் சாகிபு என்று அழைக்கப்பட்டார்.

கோட்டைப்பட்டினத்தின் செல்வந்தர் மாப்பிள்ளை லெப்பை மரைக்காயரின் இரண்டு புதல்விகளில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ராவுத்தர் சாகிபு பெண் கேட்டார். வசதி குறைந்த அவருக்குப் பெண் தர முடியாது என்று கூறிவிட்டார் மரைக்காயர். மரைக்காயரின் மூத்தமகள் பாம்பு கடித்து இறந்துபோனார். இரண்டாவது மகள் மேகநீர் உபாதையுள்ளவர். இராவுத்தர் சாகிபு ஓதிக் கொடுத்த தண்ணீரைப் பருகிய பிறகு அவர் குணமடைந்துவிட்டார். அதனால் மரைக்காயர் மனம் மாறி மகள் ஷைகம்மாளை மணம்செய்து வைத்தார். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

அவரது இரண்டாம் மனைவியான மைமூனாவுக்குப் பிறந்த புதல்வரே, இறைநேசர் பாசிப்பட்டினம் நெய்னா முகம்மது வலியுல்லா. பிள்ளை பிறந்த நாற்பதாம் நாளிலேயே மைமூன் அம்மா கணவரின் முதல் மனைவி ஷைகம்மாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மறைந்தார்.

ராவுத்தர் சாகிபிடம் பணிந்த புலி

ராவுத்தர் சாகிபு தமது வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அந்தச் சிறப்புகளை எடுத்துரைக்கும் பாமாலையை இரு ஆலிம்கள் இயற்றினார்கள். ஒருநாள் இருவரும் குளத்தில் குளித்துவிட்டுக் கரைக்கு வர முயன்றபோது ஒரு புலி நிற்பதைக் கண்டனர். தங்கள் மீது புலி பாய்ந்துவிடுமோ என்று பயந்து நடுங்கினார்கள். அப்போது ராவுத்தர் சாகிபு அந்த வழியாக வந்தார். அவரைக் கண்ட புலி பணிந்து தணிந்து நின்றது. காட்டுப் பக்கம் போய்விடும்படி சைகை செய்தார். அதன்படி புலி சென்றுவிட்டது.

ஆலிம்கள் இந்தக் காட்சியை வியப்போடு பார்த்தார்கள். இறைநேசர் ராவுத்தர் சாகிபைப் புகழ்ந்து பாமாலை பாடினார்கள்.

ஒருநாள் மழை கொட்டிக் கொண்டிருந்தது. சமையல் வேலையைத் தொடங்க முயன்றார் தாயார் ஷைகம்மாள். அடுப்பு மூட்டுவதற்கு நெருப்புப் பற்றவைக்கும் கல் தேவைப்பட்டது. அதைக் கொண்டுவரும்படி மகனிடம் சொன்னார் ராவுத்தர் சாகிப். கல்லை எடுத்து வருவதற்கு பதில் வீட்டு மேல்கூரையிலிருந்து ஓர் இலையை எடுத்து ஊதினார் நெய்னா முகம்மது. உடனடியாக அதில் தீப்பற்றிக் கொண்டது. அந்த ஓலையை அம்மாவிடம் தந்தார். ஆச்சரியமடைந்த தாயார் அதைக் கொண்டு அடுப்பு மூட்டிச் சமைக்க ஆரம்பித்தார்.

கோட்டைப்பட்டினத்தில் தந்தையும், பாசிப்பட்டினத்தில் தனயனும் இருந்தபடி திருப்பணியாற்றிவந்தனர். இராவுத்தர் சாகிபு ஹிஜ்ரி 1083 சபர் மாதம் 14-ம் நாள் (கிபி1613) மறைந்தார். அவர்களின் நினைவு விழா ஆண்டுதோறும் சபர் மாதத்தில் கோட்டைப்பட்டினத்தில் கொண்டாடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in