

முருகப்பெருமானுக்கு வருடம் முழுவதும் விழாக்கள் உண்டு. என்றாலும் இரண்டு முக்கியமான விழாக்களை கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். முதலாவது தைப்பூசத் திருவிழா. வருடந்தோறும் தைப்பூச நன்னாளையொட்டி, பழநி திருத்தலத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள் லட்சக்கணக்கான பக்தர்கள்.
அடுத்தது... சூரசம்ஹாரம். கந்த சஷ்டி பெருவிழா. இந்த விழாவின் போது, ஆறுநாளும் விரதம் மேற்கொண்டு, திருச்செந்தூர் திருத்தலத்துக்கு வந்து செந்திலாண்டவரை தரிசித்து மகிழ்வார்கள் லட்சக்கணக்கான பக்தர்கள்.
மாதந்தோறும் வருகிற பூச நட்சத்திர நாளை வெகுவாக, வணங்கி வழிபடுகிறோமோ இல்லையோ... மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி நாளில் விரதம் மேற்கொண்டு முருகக் கடவுளை வணங்குவதையும் ஆராதிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிற பக்தர்கள் ஏராளம்.
கார்த்திகை மாதத்தில் சில சமயங்களில் ஐப்பசி கடைசியில் வளர்பிறை சஷ்டி திதியில், சூரனை சம்ஹாரம் செய்த விழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். இதையே கந்த சஷ்டி பெருவிழா என்கிறோம்.
முருகப்பெருமான், சூரனை சம்ஹரித்த திருத்தலம் என்று திருச்செந்தூரைச் சொல்கிறது ஸ்தல புராணம். அதனால்தான் திருச்செந்தூரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது சூரசம்ஹார விழா.
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீர வேல் முருகனுக்கு அரோகரா’ என்கிற கோஷங்களுடன் சிலிர்க்கச்சிலிர்க்க தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.
’சிக்கலில் வேல் வாங்கி... செந்தூரில் சம்ஹாரம் என்றொரு வாசகமே உண்டு. திருச்செந்தூர் என்றில்லாமல், அனைத்து முருகப்பெருமான் குடிக்கொண்டிருக்கிற கோயில்களிலும் கந்த சஷ்டி பெருவிழாவின் போது சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் வழிபாடுகளும் அமர்க்களப்படும்.
முருகப்பெருமான் ஆறுபடை வீடுடையோன் என்றெல்லாம் இங்கே முருகக்கடவுள் சாந்நித்தியத்துடன் திகழும் கோயில்கள் ஆயிரம். குன்றுதோறும் குமரன் என்ற வாசகம் பிரபலம் என்றாலும் குன்றில்லாத இடத்திலும் கோயில் கொண்டிருக்கிறார் முத்துக்குமரன்.
கந்த சஷ்டி நன்னாளில், சூரசம்ஹாரம் செய்த நன்னாளில், முருகக்கடவுளை மனதாரப் பிரார்த்திப்பதும் தரிசித்து வேண்டுவதும் உன்னத பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
இன்று 20ம் தேதி வெள்ளிக்கிழமை, கந்தசஷ்டி. முருகக் கடவுள் அன்னை பார்வதி தேவியிடம் வேல் வாங்கி, சூரபத்மன் எனும் அரக்கனை அழித்தொழித்த நன்னாள். தீயசக்தியான அரக்கனைக் கொன்று மக்களுக்கு நிம்மதியும் அமைதியும் ஆனந்தமும் தந்த அற்புதமான நாள்.
கந்தசஷ்டியில்... முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்துங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து, கந்தனை உளமார வழிபடுங்கள். உங்கள் கவலைகளையும் துக்கங்களையும் போக்கி அருளுவார்.
செவ்வாய் முதலான தோஷங்களைப் போக்குவார். தீய சக்திகளில் இருந்து நம்மைக் காத்தருள்வார் செந்தில்வடிவேலன்! அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வள்ளி மணாளனை, சிவக்குமாரனை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்கள் நடத்திக் கொடுப்பான். மங்காத செல்வங்களைத் தந்தருளுவான்!