வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து தீபத் திருவிழாவுக்கு திருக்குடைகள் ஊர்வலம் புறப்பட்டது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் சார்பில் திருக்குடைகள் ஊர்வலம் இன்று தொடங்கியது.
வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து ஆண்டுதோறும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருக்குடை ஊர்வலம் கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் மீண்டும் திருக்குடைகள் ஊர்வலம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரும் 20-ம் தேதி தீபத் திருவிழா நடைபெற உள்ளது.
இத்திருவிழாவுக்காக, ஸ்ரீ அண்ணாமலையார் திருக்குடை சமிதி மற்றும் வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் சார்பில் 2-ம் ஆண்டு திருக்குடைகள் ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சி இன்று (நவ. 18) காலை நடைபெற்றது.
திருக்குடை ஊர்வலத்தை காட்பாடி அடுத்த மகாதேவமலை மகானந்த சித்தர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், திருக்குடை சமிதி ப்ரத்தியங்கராதாசன், கோயில் செயலாளர் சுரேஷ், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு மேள, தாளங்கள் முழங்க 3 திருக்குடைகள் ஊர்வலமாக இன்று புறப்பட்டது. இந்த திருக்குடைகள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் நாளை (நவ. 19) ஒப்படைக்கப்படுகிறது.
வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊர்வலமாக செல்லும் திருக்குடைக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து திருக்குடையை தரிசனம் செய்ய உள்ளனர்.
