

குருவின் வழிகாட்டுதலும் அவரின் துணையும் மிக மிக அவசியம். இதை நமக்கெல்லாம் வலியுறுத்துவதே ஐயப்ப சுவாமிக்கான மாலை அணிதலும் விரதமும் யாத்திரையும் தரிசனமும்!
ஐயப்ப ஸ்வாமிக்குக் கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, விரதமிருந்து, இருமுடி எடுத்து, சபரிமலைக்குச் செல்வதற்கு குருசாமியின் துணை மிகவும் அவசியம். இதை காலங்காலமாக நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது சபரிமலை யாத்திரை.
’குருவை தினமும் வணங்குகிறோம். எல்லோரையும் ஒருகட்டத்தில் குருவாகவே பாவிக்கிறோம். ‘சுவாமி சரணம்’ என்று நமஸ்கரிக்கிறோம். அவரையும் குழுவினரையும் வீட்டுக்கு அழைத்து பஜனையும் பூஜையும் செய்கிறோம். முக்கியமாக, வந்திருப்பவர்கள் அனைவரையும் குருமார்களாகவே வரித்துக் கொண்டு, ஐயப்ப சுவாமியாகவே நினைத்தபடி, அவர்களுக்குப் பாத பூஜை செய்கிறோம். இதையெல்லாம் புரிந்தும் உணர்ந்தும் செய்தாலே, நம் விரதக் காலம் என்றில்லை... மொத்த வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகிவிடும் என்கிறார்கள் ஐயப்ப குருசாமிமார்கள். இவற்றையெல்லாம் நமக்கு உணர்த்தி, வாழ்ந்து காட்டியவர்களில் மிக மிக முக்கியமானவர்தான் புனலூர் தாத்தா எனும் மகான்! சபரிமலைக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாகச் சென்றுகொண்டிருக்கும் பக்தர்களுக்கு, புனலூர் தாத்தாவைத் தெரியும். சபரிமலை யாத்திரைக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தார் என்பது புரியும்.
‘‘கடவுள் அனுக்கிரகத்துல, எனது இந்த வாழ்க்கைக்கும் அமைதியான சூழலுக்கும் புனலூர் தாத்தாதான் காரணம். எனக்கும் என்னைப் போன்ற எத்தனையோ லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் அவர் அப்பாவா, குருவா இருந்து வழிநடத்தியிருக்கார். வழிநடத்திட்டிருக்கார். இந்த பரதக் கண்டத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பக்திமான்கள் பிறந்து, மலர்ந்து, மணம் பரப்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் புனலூர் தாத்தாவும்!
சுப்ரமணியம். இதுதான் புனலூர் தாத்தாவின் பெயர். அவரின் முதல் அடையாளம். பிறகு பெயருக்கு முன்னே ஊரும், வயது காரணமாக தாத்தாவும் சேர்ந்து கொண்டதாகச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.
‘‘அவரோட ஞானமும் இடைவிடாத ஜபதபங்களும்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியோட பரிபூரண அருள் அவருக்குக் கிடைக்கக் காரணம். இது எல்லாமும் சேர்ந்துதான், அவருக்கு இப்படியொரு பெரிய கௌரவத்தையும் மரியாதையையும் தந்திருக்கு.
புனலூர் தாத்தாவையும் அவரோட வீடான புனலூரில் உள்ள சண்முக விலாசத்தையும் ஐயப்ப பக்தர்களால மறக்கவே முடியாது. ஐயப்ப சுவாமிக்குக் கிடைச்ச அற்புதமான பக்தர் புனலூர் தாத்தா‘‘ என்கிறார் உபந்யாசகரும் ஐயப்ப பக்தருமான அரவிந்த் சுப்ரமணியம்.
சபரிமலைக்கு வருடந்தோறும் செல்கிற பக்தர்கள் லட்சக்கணக்கானோர். அதேபோல் கன்னிசாமியாக, முதன்முதலில் மாலையணிந்து செல்பவர்களும் மிக மிக அதிகம். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களில் இருந்து வருகிற பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்தந்த ஊர்களில் இருக்கிற குருசாமிகள் எல்லாம் குறைந்தது 20, 30 வருடங்களாகச் சபரிமலைக்குச் சென்று வருகிறவர்கள். இந்த குருசாமிகள் எல்லாரும் புதிதாக வருகிற கன்னிசாமிகளிடம் சாஸ்தாவின் மகிமைகளையும், புனலூர் தாத்தாவின் பெருமைகளையும் அவரின் மாறாத சாஸ்தா பக்தியையும் சொல்ல வேண்டும். பக்திக்கும் சிரத்தைக்கும் மனித நேயத்துக்கும் உதாரணமாகத் திகழ்ந்த புனலூர் தாத்தா எனும் ஒப்பற்ற மனிதரை, தெரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைக்கு புனலூர் தாத்தா நம்மிடையே இல்லை. ஆனாலும் அவர் வாழ்ந்த புனலூரில் உள்ள சண்முக விலாசத்தையே கோயிலாகப் பார்க்கிறார்கள் பக்தர்கள். புனலூர் தாத்தாவின் ஆத்மார்த்தமான பக்தியையும், மனிதர்கள்மீது அவர் கொண்டிருக்கிற பேரன்பையும் உணர்ந்து, தங்களின் குருநாதராகவே புனலூர் தாத்தாவை மானசிகமாக வரித்துக்கொண்டிருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
‘’எங்க குருநாதர் புனலூர் தாத்தாதான் ஐயப்ப பக்தர்களுக்கான சிறந்த ரோல்மாடல். குருவின் பரிபூரண ஆதரவும் அருளும் எங்களுக்கெல்லாம் நேரடியாவே கிடைச்சது, கடவுளோட கருணை. சபரிகிரிவாசனைத் தரிசனம் பண்றதுக்காக புனலூர் தாத்தா குருசாமியா இருந்து எங்களையெல்லாம் கூட்டிட்டுப் போனதையும், அப்ப தன்னோட நித்தியானுஷ்டங்களை கர்ம சிரத்தையா செஞ்சதையும் மறக்கவே முடியாது.
இன்னிக்கு நிம்மதியும் அமைதியுமா, நிறைவோடயும் பூரிப்போடயும் உற்சாகமா வாழ்ந்துட்டிருக்கறதுக்குக் காரணம், குருசாமியா எங்களுக்கு இருந்த புனலூர் தாத்தாதான். இன்னிவரைக்கும் சூட்சும ரூபமா இருந்து எங்களை வழிநடத்திட்டு வர்றார் புனலூர் தாத்தா’’ என்று நெகிழ்ந்து தெரிவித்துள்ளார் வாஞ்சீஸ்வர ஐயர் என்று அரவிந்த் சுப்ரமண்யம் விவரித்துள்ளார். வாஞ்சீஸ்வர ஐயர், புனலூர் தாத்தாவுடன் பல வருடங்கள் சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்.
ஐம்பது மற்றும் அறுபதுகளில், இன்றைக்கு போல் அன்று இல்லை பாதைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். சொல்லப்போனால் பாதையே இல்லை. மலைக்குக் கிளம்பி, மலையேறத் துவங்கினால், ‘இந்தப் பக்கம் போகலாம்’ என்பார் புனலூர் தாத்தா. அந்தப் பக்கம் ஒருவர், செடிகொடிகளையெல்லாம் வெட்டிக் கொண்டே முன்னே செல்வார். ‘இப்படி இடதுபக்கமா போலாம்’ என்று புனலூர் தாத்தா சொல்வாராம். உடனே இடது பக்கம் உள்ள முட்புதர்களை வெட்டிக் கொண்டே வருவார்களாம். ஒருகட்டத்தில் இவருக்கு ‘காடுவெட்டி’ என்றே அடைமொழி சேர்ந்து கொண்டது. அப்படி புனலூர் தாத்தா உருவாக்கிய பாதைகளில்தான் வழிகளில்தான் இன்றைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
வருடந்தோறும் கார்த்திகை மாதம் வந்ததும் விரதம் இருக்க ஆரம்பிப்பது போலவே, ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு குருசாமியாக வாழ்ந்த புனலூர் தாத்தாவுக்கு மார்கழியில குருபூஜையை கர்மசிரத்தையாகச் செய்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
‘அனுக்கிரக சாஸ்தா சாரிட்டபிள் டிரஸ்ட்’ உறுப்பினர்கள் சேர்ந்து, டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஐயப்ப பக்தர்களையெல்லாம் அழைத்து, மிகப் பிரமாண்டமாக குருபூஜை விழா நடத்துகிறார்கள். அந்த நாளில், புனலூர் தாத்தாவின் திருவுருவப் படத்தை வைத்து, அதற்கு மாலை அணிவித்து, அலங்கரித்து, குரு சரணம் சொல்கிறார்கள். ஐயப்ப சுவாமியின் பாடல்களைப் பாடுகிறார்கள்.
குருவை எவரொருவர் பூஜிக்கிறாரோ... அங்கே கடவுள் சூட்சும ரூபமாக வந்து, அனைவரையும் ஆசீர்வதிக்கிறார் என்கிறார் அரவிந்த் சுப்ரமணியம்.
ஐயப்ப சுவாமியை வணங்குவோம். பக்தியும் ஆன்மிகமும் இறைப்பணியும் என வாழ்ந்த புனலூர் தாத்தாவைப் போற்றுவோம்!