Last Updated : 18 Nov, 2020 11:52 AM

 

Published : 18 Nov 2020 11:52 AM
Last Updated : 18 Nov 2020 11:52 AM

மனக்குழப்பம் தீர்க்கும் திருவெண்காடு! 

திருவெண்காடு திருத்தலத்தை ஆதி சிதம்பரம் என்று போற்றப்படுகிறது. புதன் பரிகாரத் திருத்தலமான இங்கு வந்து வேண்டிக்கொண்டால், மனக்கிலேசங்கள், மனக்குழப்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

சீர்காழி அருகில் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெண்காடு. மிகப்பிரமாண்டமான திருக்கோயில். தேவாரம் பாடப்பட்ட புண்ணிய திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். இங்கே இன்னொரு சிறப்பு... புதன் பகவான் இங்கே தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார்.

ஆமாம்... இது புதன் பரிகாரத் திருத்தலம். நவக்கிரக தலங்களில் இது புதன் பரிகாரத் திருத்தலம். பல பெருமைகளும் சாந்நித்தியமும் கொண்ட இந்தத் திருத்தலத்தை ஆதி சிதம்பரம் என்று போற்றுகிறது ஸ்தல புராணம்.

தில்லை என்று போற்றப்படும் சிதம்பரத்தில் சிவனார் திருநடனமாடினார். முன்னதாக, இந்தத் திருத்தலத்தில், சிவபெருமான் திருநடனம் புரிந்தார் என்கிறது ஸ்தல புராணம். மேலும் இங்கே, சிதம்பரம் தலத்தைப் போலவே, நடராஜருக்கு சபை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்படிக லிங்கமும் ரகசியமும் கொண்ட தலம் இது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

நடராஜரின் திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் வியக்கவைக்கின்றன. நடராஜரின் திருப்பாதத்தில் பதினான்கு உலகங்களை உணர்த்தும் விதமாக, பதினான்கு சதங்கைகள் கொண்ட காப்பு அமைந்துள்ளது. பிரணவம் தொடங்கி இறுதியாக உள்ள 81 பத மந்திரங்களை உணர்த்துகிற வகையில், 81 சங்கிலி வளையங்கள் கொண்ட அரைஞாண் இடுப்பில் காட்சி தருகிறது.

28 யுகங்கள் முடிந்துவிட்டன என்பதைக் குறிக்கும் வகையில், 28 எலும்பு மணிகளால் கோர்த்துக் கட்டப்பட்ட ஆரத்தை நடராஜர் பெருமான் அணிந்துள்ளார். சிரசில் மயிற்பீலி அணிந்துள்ளார். மீன் வடிவில் கங்காதேவியும் இளம்பிறையும் ஊமத்தம்பூவும் வெள்ளெடுக்கும் சூடியுள்ளார் நடராஜர்.

மேலும் ஷோடஸ கலைகளை உணர்த்தும் விதமாக பதினாறு சடைகள் விரிய காட்சி தருகிறார் நடராஜர்.

திருவெண்காடு திருத்தலத்தில், ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் நடராஜ பெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். கவலைகளையெல்லாம் காணடிக்கச் செய்து அருளும் அற்புதத் திருத்தலம், மனக்கிலேசம் போக்கும் தலம், மனக்குழப்பம் நீக்கும் திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x