ஞானபைரவர்; இரண்டு துர்கை; நின்ற திருக்கோலத்தில் அழகன்!  - பேரூர் திருக்கோயில் மகிமை

ஞானபைரவர்; இரண்டு துர்கை; நின்ற திருக்கோலத்தில் அழகன்!  - பேரூர் திருக்கோயில் மகிமை
Updated on
1 min read

கோவை பேரூர் பட்டீஸ்வரம் கோயில், ஞானபைரவர், இரண்டு துர்கைகள், சுப்ரமண்யர் என பல சிறப்புகளும் சிற்ப நுட்பங்களும் கொண்டு திகழ்கிறது

கோவையில் உள்ள அற்புதமான திருத்தலம் பேரூர். இங்கே உள்ள திருக்கோயில் அழகுடனும் சாந்நித்தியத்துடனும் திகழ்கிறது. இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் பட்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமரகதவல்லி அம்பாள். எல்லோரும் பச்சை நாயகி அம்மன் என்றே அழைத்து வணங்குகின்றனர்.

புராணமும் புராதனமும் மிக்க திருத்தலம் இது. இந்தத் தலத்தில் உள்ள ஒவ்வொரு சந்நிதியும் சாந்நித்தியம் மிக்கது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

மோட்சம் தரும் தலம், முக்தி தரும் திருத்தலம் என்றெல்லாம் போற்றப்படுகிற பேரூர் கோயிலில், பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. இந்த பைரவரை ஞான பைரவர் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். இவரை 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு வழிபட்டு வந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

இதேபோல், இங்கே உள்ள துர்கையும் விசேஷம். பொதுவாக சிவாலயங்களில் துர்கையும் காட்சி தருவார். இவரை சிவ துர்கை என்பார்கள். இங்கே, சிவ துர்கை, விஷ்ணு துர்கை என இரண்டு துர்கையரும் உள்ளனர். எனவே இன்னும் பலமும் வளமும் தருகிற தலம் என்றும் தீய சக்திகளை விரட்டியடிக்கும் தலம் என்றும் கொண்டாடுகின்றனர் ஆச்சார்யர்கள்.

பேரூர் நடராஜர் ரொம்பவே விசேஷம். அழகு ததும்ப ஒய்யார நடனத்துடன் காட்சி தந்தருள்கிறார். கால் தூக்கி திருநடனம் புரிய நடராஜரின் திருப்பாதத்தை வெள்ளிச் சாளரத்தின் வழியாக சிவ துர்கை, தரிசித்தபடியே இருப்பது அரிதானது என்கின்றனர்.

பேரூர் கோயிலின் சிவ துர்கையை தரிசித்தால், தீய சக்திகள் தூர ஓடிவிடும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் விலகும். எதிரிகள் பலமிழப்பார்கள் என்பது ஐதீகம்.
பேரூர் பட்டீஸ்வரம் கோயிலின் இன்னொரு சிறப்பு... சுப்ரமணியர். வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் அழகு ததும்பக் காட்சி தருகிறார் அழகன் முருகன்.

செவ்வாய்க்கிழமைகளிலும் சஷ்டியிலும் கிருத்திகை நட்சத்திர நாளிலும் சுப்ரமண்யரை தரிசித்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகம் தந்தருள்வார். செவ்வாய் தோஷம் போக்கி அருளுவார் என்கின்றனர் பக்தர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in