

சபரிமலைக்குச் செல்ல கார்த்திகை பிறந்ததும் விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள் பக்தர்கள். எங்கு பார்த்தாலும் ஐயப்ப பக்தர்களைப் பார்க்கலாம். அவர்கள் எழுப்புகிற சரண கோஷங்களைக் கேட்கலாம்.
வருடந்தோறும் மாலையணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஏராளம். அதேபோல், புதிதாக முதன்முறையாக,விரதம் மேற்கொண்டு, மாலையணிந்து மலைக்குச் செல்லும் பக்தர்களும் ஏகப்பட்ட பேர். ஒவ்வொரு வருடமும் இப்படிப் புதிதாக கன்னிச்சாமிகளாக வருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிக் கொண்டே இருக்கிறது.
விரதமுறைகள் குறித்து பிரபல ஐயப்ப பக்திப் பாடகர் வீரமணி ராஜூ பல தகவல்களை தெரிவித்தார்.
’’மரணம் முதலான துக்க காரியங்களில், ஐயப்ப மாலை அணிந்தவர்கள் மட்டுமின்றி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளக் கூடாது. மிக முக்கியமான உறவுக்காரர்கள், நண்பர்கள் இறந்துவிட்டால், ஐயப்ப மாலையை கழற்றி, ஸ்வாமி படத்தில் மாட்டிவிட்டு, துக்க காரியத்துக்குச் செல்லவேண்டும். பிறகு ஒரு வருடத் தீட்டு முடிந்த பிறகே, மலைக்குச் செல்லவேண்டும். அதாவது அடுத்த வருடம்தான் மாலையணிந்து செல்லவேண்டும். அதேபோல், பெண்ணின் சடங்கு, குழந்தை பிறந்து பெயர்சூட்டுதல் முதலான விழாக்களையும் தவிர்க்கவேண்டும்.
* மது, அசைவம், புகைப்பிடித்தல் ஆகியவற்றை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பயன்படுத்தக் கூடாது. ஏற்கெனவே சொன்னது போல், ஒரு மண்டல காலம் விரதம் இருக்கும்போது, இவற்றைத் தவிர்த்துவிட்டால், பிறகு மதுவில் இருந்தும் புலாலில் இருந்தும் புகைப்பதில் இருந்தும் மொத்தமாகவே விடுபட்டுவிடலாம். அப்படி விடுபடுவது மிகவும் எளிதாகிவிடும்.
* வீட்டில் பெண்கள் மாதவிலக்காகி ஏழு நாட்கள் கழித்தே அவர்கள் சமைத்த உணவைச் சாப்பிடவேண்டும். நிறையபேர், இந்தக் காலகட்டத்தில், ரொம்பவே டென்ஷனாகிவிடுகிறார்கள். மனைவியை மகளை, ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். இவர்கள் வேறு எங்கேனும் தங்குகிறார்கள். இந்த நாட்களில், கடுகடுப்பாகவும் சிடுசிடுப்புடனும் இருப்பார்கள். இவையேதும் தேவையே இல்லை என்கிறார்கள், முப்பது வருடங்களுக்கும் மேலாக மலைக்குச் சென்று கொண்டிருக்கும் குருசாமிகள்.
* குருசாமியின் வழிகாட்டுதலுடனும் அவர்களின் துணையுடனும் மலைக்குச் செல்லவேண்டும். முக்கியமாக, குருநாதரின் துணையுடன்தான் இருமுடி கட்டிக் கொள்ளவேண்டும். அவருடனேயே சபரி யாத்திரைக்குச் செல்வதைக் கண்டு, ஓர் ஒழுங்குடன் யாத்திரையை மேற்கொள்வோருக்கு குருவுக்கு குருவாக, குருநாதர்களுக்கெல்லாம் குருநாதராகத் திகழும் ஐயப்ப சுவாமி அருளுகிறார்.
* முன்னதாக, நம்மால் முடிந்த அளவுக்கு ஐயப்ப பூஜை நடத்தி, அன்னதானம் வழங்குவது சிறப்பு.அன்னதானப்ரியன் என்று ஐயப்ப சுவாமியைக் கொண்டாடுகிறோம். எனவே, கூடுமானவரை, விரதகாலங்களில், மணிகண்ட சுவாமியை மனதார நினைத்து, அன்னதானம் செய்வது இல்லத்தில் சுபிட்சத்தை உண்டுபண்ணும்.
* பம்பா நதியில் நீராடும் போது, இறந்து போன முன்னோர்களுக்கு அங்கே ஈமக்காரியங்கள் செய்யலாம். அவர்களின் ஆசி அப்போது பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்! அதேசமயம், பம்பை எனும் புண்ணிய நதியை, மாசு படுத்திவிடாதீர்கள். ஐயப்ப சுவாமி நீராடிய நதி. அதில் தண்ணீரெடுத்து கொப்புளிப்பதோ, நம் ஆடைகளை அதில் விட்டுவிட்டால், தோஷங்களும் பாபங்களும் விலகிவிடும் என்று அதில் துணிகளை விடுவதோ தவறு. தவிர, நதிகளை அசுத்தப்படுத்துவது மகா பாபம். மேலும் இந்தக் காலகட்டத்தில், பம்பா நதியின் நீரெடுத்து சிரசில் தெளித்துக்கொள்வது மட்டுமே போதுமானது.
* குருநாதரையும் மற்ற சாமிமார்களையும் நமஸ்கரிக்கவேண்டும். விரதம் இருக்கும் ஐயப்ப சாமிமார்களைப் பார்க்கும் போது, அவர்கள் எவராக இருந்தாலும், தெரியாதவராகவே இருந்தாலும்... சுவாமி சரணம் என்று சொல்லி வணக்கம் செலுத்த வேண்டும்.
* ஐயப்ப மலையில், பதினெட்டுப் படிகளேறி ஐயப்ப ஸ்வாமியைத் தரிசிப்பதே சிறப்பு. வாழ்வின், பதினெட்டுத் தத்துவங்களை உள்ளடக்கிய அந்தப் படிகளைக் கடந்து ஸ்வாமி தரிசனம் செய்வதே உத்தமம்! பதினெட்டுப் படிகளில் ஏறும் போது, ஐயன் ஐயப்ப சுவாமியை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படியும் நல்ல அதிர்வுகள் கொண்டவை. ஒவ்வொரு படி ஏறும் போதும், உங்களுக்காகவும் உங்கள் உறவுகளுக்காகவும் தோழமைகளுக்காகவும் அறிந்தவர் தெரிந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். பதினெட்டுப்படியேறும் போது நாம் வைக்கிற பிரார்த்தனைகளை சபரிகிரி சாஸ்தா, நமக்கு பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பது ஐதீகம்.
* தரிசனம் முடிந்து வீடு திரும்பியதும், அந்தப் பிரசாதத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, நடக்க இயலாதவர்கள், வயதானவர்கள், பெண்கள் ஆகியோருக்கு வழங்கவேண்டும் என்பது மிக முக்கியமான... ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களின் கடமை!
‘அவ்வளவுதான். கார்த்திகை பிறந்தாச்சு. விரதம் இருந்தாச்சு. ஐயப்பனையும் பார்த்தாச்சு’ என்று விரதம் பூர்த்தியாகலாம். ஆனால் நாம் எப்போதும் ஐயப்ப பக்தர்தானே!
எனவே, கூடுமானவரை விரத காலத்தில் அனுஷ்டித்த, கடைப்பிடித்த நல்ல விஷயங்களைத் தொடர்வதே உண்மையான பக்தருக்கு அழகு. எனவே ஒழுக்கத்தை மீறாமல், பெரியவர்களை வணங்கி, கோபதாபங்களைத் தவிர்த்து, நல்ல வார்த்தைகளைப் பேசி, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள ஐயப்ப ஸ்வாமி ஆலயத்துக்குச் சென்று, வழிபடுங்கள். இன்னும் இன்னுமாக வளமுடன் வாழ்வீர்கள்.
இன்னொரு விஷயம்... ஐயப்பனுக்கு விரதம் இருக்கிறேன், ஐயப்பனுக்கு விரதம் இருக்கிறேன் என்று சொல்கிறோம். உண்மையில்... நமக்காகத்தான் இந்த விரதம். நம்மை செம்மைப்படுத்துவதற்கும், மலர்ச்சியாக்குவதற்கும்தான் இந்த விரத அனுஷ்டானங்கள், சடங்கு சாங்கியங்கள் எல்லாமே! இதையும் மனதில் வைத்துகொண்டு விரத நியமங்களைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் முழு ஈடுபாட்டுடனும் ஒழுங்குடனும் விரதம் மேற்கொள்ளுங்கள்.
இதுவரை எப்படியோ... இந்த முறை... முழுக்கட்டுப்பாட்டுடன் உறுதியுடன் கர்மசிரத்தையுடன் விரதங்களை அனுஷ்டியுங்கள். கடைபிடியுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படும் நல்ல நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். ஐயனின் அருளையும் பெறுவீர்கள். எல்லோருக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள். நம் தேசத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு வீரமணி ராஜூ தெரிவித்தார்