Last Updated : 15 Nov, 2020 10:14 PM

Published : 15 Nov 2020 10:14 PM
Last Updated : 15 Nov 2020 10:14 PM

காவிரியில் கார்த்திகை முதல்நாளில் நீராடினாலும் துலா ஸ்நான பலன் உண்டு! 

ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். இந்தத் துலா மாதத்தில், காவிரியில் நீராடுவது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேசமயம், ஐப்பசி முடிந்து கார்த்திகை மாதப் பிறப்பில், காவிரியில் குளித்தாலும் மகா புண்ணியம் கிடைக்கப் பெறுவோம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

'நடந்தாய் வாழி காவிரி’ என்று காவிரியைப் போற்றுவோம். நடந்து நடந்து, ஊர்ந்து ஊர்ந்து, வளைந்து நெளிந்து வருகிற காவிரி கொள்ளை அழகு. அப்பேர்ப்பட்ட அழகுடன் திகழும் காவிரி, புண்ணியங்களையும் வைத்திருக்கிறது.
காவிரியில் நீராடினால்... நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்று சொல்லி வைத்திருக்கிறது சாஸ்திரம்.

நீரின்றி அமையாது உலகு என்பது சத்திய வார்த்தை. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் நதிகள் பாய்ந்தோடுவது நம் பாரத தேசத்தில்தான்! அதிலும் கூடுதல் பெருமை... அத்தனை நதிகளும் புண்ணிய நதிகள் என்று போற்றுகின்றன புராணங்கள்.

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பார்கள். இந்த துலா மாதத்தில் எந்த நதிக்குமே இல்லாத சிறப்பும் பெருமையும் காவிரிக்கு உண்டு.

இந்த மாதத்தில், அதாவது ஐப்பசி மாதத்தில், எல்லாப் புண்ணிய நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதீகம். எனவே துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்றூ சிலாகிக்கிறார்கள். இந்த மாதத்தில், துலா ஸ்நானம் செய்தால், கங்கை முதலான சகல புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது தர்ம சாஸ்திரத்தின் வாக்கு!

இதற்கு ஓர் கதை உண்டு.
சோழ தேசத்தில், மாயூரநாதர் கோலோச்சுகிற மயிலாடுதுறையைக் கடந்து சின்னஞ்சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தார் சிவபக்தர் ஒருவர். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே வணங்குவதில் ஆனந்தம் அவருக்கு! ஆனால்... ஒரு சோகம்... அவர் ஊனமுற்றவர். காலில்தான் ஊனமே தவிர, மனமானது சிவபக்தியால் செம்மையாகவே இருந்தது.

ஓர் ஐப்பசியில்... அந்த சிவபக்தருக்கு ஆசை... ‘எல்லாரும் இந்த மாசத்துல காவிரில குளிக்கிறாங்க. புண்ணியம் வாங்கிக்கிறாங்க. நாமளும் இந்த முறை எப்படியாவது குளிச்சிடணும்; அப்பனே... சிவனே... இந்தப் பிறவி எடுத்த பயனை எனக்குக் கொடுப்பா’ என வேண்டியபடியே, மாயூரம் நோக்கி, துலா ஸ்தானக் கட்டத்தில் நீராடுவதற்காகக் கிளம்பினார்.

அவரால் நடக்க முடியாது. கால் ஊன்றி நிற்கக் கூட முடியாது. ஆகவே கொஞ்சம்கொஞ்சமாக, தவழ்ந்தபடி காவிரியை நோக்கி நகர்ந்து நகர்ந்து வந்தார். வெயில் வந்தால், மரத்தடியில் இளைப்பாறுவார். இரவு வந்தால், வழியில் உள்ள கிராமத்தின் ஏதோவொரு வீட்டுத் திண்ணையிலோ ஆற்றங்கரை மண்டபத்திலோ தங்கி விடுவார்.
பசித்தால்... சிவபக்தருக்கு எவரேனும் அன்னம் வழங்கும் தேசமாயிற்றே. இப்படி பல நாட்கள் தவழ்ந்து, கிராமம் கிராமமாகத் தங்கி, இளைப்பாறிக் கொண்டே, ஒருவழியாக மாயூரம் புண்ணிய க்ஷேத்திரத்தை அடைந்தார். காவிரிக் கரைக்குச் சென்றார். துலா ஸ்நானக் கட்டம் என்று சொல்லப்படும் அந்தப் புனித இடத்தை நெருங்கினார்.

அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள்... அந்த ஊர்க்காரர்கள். வழக்கமாகவே காவிரியில் குளிப்பவர்கள். ‘என்ன தம்பி... எந்த ஊரு... வந்ததுதான் வந்தே. நேத்திக்கே வந்திருக்கலாம். வந்து குளிச்சிருக்கலாம். உனக்குப் பெரிய புண்ணியம் கிடைச்சிருக்கும்’ என்றார்கள். கேட்ட அந்த சிவபக்தர், நொறுங்கிப் போனார். மனமுடைந்தார். துக்கத்தில் தொண்டை அடைத்தது. ‘அப்படீன்னா இன்னிக்கிக் குளிச்சா, புண்ணியமில்லையா. ஏன் அப்படி?’ என்று அழுதுகொண்டே கேட்டார்.

‘ஐப்பசி மாசம் முடிஞ்சிருச்சுப்பா. இன்னிக்கி கார்த்திகை பொறந்திருச்சு. ஐப்பசி மாசம் முச்ச்சூடும் எப்ப வேணாக் குளிச்சிருக்கலாம். அதான் புண்ணியம்’ என்று விளக்க... அந்த பக்தர் இன்னும் துவண்டார். தன் நடக்கமுடியாத கால்களை நீவிவிட்டுக்கொண்டே அழுதார்.

‘சரி... என்ன செய்வது? பயணத்தின் போது, ஒவ்வொரு நாளும் காகங்களுக்கு எள் சாதம் படைத்து, சிவ பூஜை செய்துவிட்டு வந்தோம். அந்த நிறைவே போதும்’ என சிவனாரை நினைத்து கைகூப்பினார். ‘பரவாயில்லை. இது சிவகிருபை. ஈஸ்வரசித்தம். பரமன் கணக்கு’ என சொல்லியபடியே காவிரியைப் பார்த்தார்.

அங்கே... ஓர் அதிசயம் நிகழ்ந்தது. காவிரியில் இருந்து எழுந்து காட்சி தந்தார் சிவனார். தவழ்ந்த நிலையில் இருந்த பக்தர், அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். ‘என் சிவனே... என் சிவனே... என் சிவனே...’ என்று அரற்றினார். நெடுஞ்சாண்கிடையாக வணங்கினார்.

‘உன் பக்தியில் மகிழ்ந்தேன். வா... வந்து காவிரியில் நீராடு. கார்த்திகை பிறந்தாலும், ஐப்பசியில் நீராடிய பலனை உனக்குத் தருகிறேன்’ என அருளினார். மெள்ள படிகளில் தவழ்ந்து, காவிரியில் இறங்கி, கிழக்குப் பார்த்தபடி முங்கி எழுந்தார் அந்த பக்தர். சிலிர்ப்பில் இருந்தும் வியப்பில் இருந்தும் மாறாமல் ஆனந்தக் கண்ணீருடன் நீராடினார். குளித்து, படித்துறை கடந்து, கரையேறிய பக்தர் நெகிழ்ந்து அழுதார். மகிழ்ந்து அழுதார். வியந்து அழுதார். அவரின் கால்கள் குணமாகிப் போயிருந்தன என்று ஐப்பசி துலா ஸ்நானம் குறித்து விவரிக்கிறது கதை ஒன்று. .

இறைவனது கருணையைக் கண்டு சிலிர்த்த பக்தர், ‘இந்த வரம், எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கிடைக்கும்படி அருளுங்கள்!’ என வேண்டினார். ‘அப்படியே ஆகட்டும்’ என அருளி ஆசீர்வதித்தார் தென்னாடுடைய சிவனார்!

அன்று முதல், பாவங்கள் களையவும் புண்ணியங்கள் கிடைக்கவும், ஐப்பசி மாதத்திலும் கார்த்திகை மாதப் பிறப்பு அன்றும் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நீராடுவதை விசேஷமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

இன்னொரு விஷயம்... சனீஸ்வரனுக்கு, ‘சனைச்சரன்’ என்ற பெயரும் உண்டு. சனைச்சரன் என்றால் மெள்ளச் செல்பவன்; ஊர்ந்து செல்பவன் என்று அர்த்தம். சனீஸ்வர பகவான், கால் ஊனமுற்றவர் என்கிறது புராணம். எனவே, முடவன் முழுக்கு என்று சொல்லப்படும் கார்த்திகை மாதப் பிறப்பு மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் காகத்துக்கு எள் சாதம் வைப்பது மிகுந்த பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். முக்கியமாக, இயலாதோருக்கு எப்போதெல்லாம் முடிகிறதோ... அப்போதெல்லாம் அன்னதானம் செய்யுங்கள். ஒரு தயிர்சாதமோ, எலுமிச்சை சாதமோ, புளியோதரையோ ஒரு பொட்டலம் வழங்குங்கள்.

ஐப்பசி மாதம் இன்றுடன் நவம்பர் 15ம் தேதியுடன் நிறைவுறுகிறது. நாளை 16ம் தேதி திங்கட்கிழமை கார்த்திகை மாதம் பிறக்கிறது. முடிந்தவர்கள், மறக்காமல் காவிரியில் நீராடுங்கள். முடவனுக்கு முழுக்கு நாளில் நீராடுங்கள்.

ஏழு ஜென்மத்துக்கு பாவங்களும் போக்கி அருளுவாள் காவிரி அன்னை. எல்லா நலமும் வளமும் தந்தருள்வார் ஈசன்!

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x