Published : 14 Nov 2020 07:50 AM
Last Updated : 14 Nov 2020 07:50 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மீன ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்திருந்த குருபகவான் உங்களை பல பிரச்னைகளில் சிக்க வைத்து, பல வகையிலும் பாடாய்ப்படுத்தினர். உங்களுக்கு வர வேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! குடும்பத்தில் உள்ளவர்களும், உங்களைப் புரிந்துக்கொள்ளாமல் போனார்களே! சொந்த பந்தங்களெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் சென்றார்களே! பிள்ளைகளாலும் சிரமப்பட்டீர்களே! தலைக்குனிவையும், வீண் பழியையும் ஏற்படுத்திய குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்வதால் பட்டுப் போன மரம் மீண்டும் துளிர்ப்பதுபோல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். திக்குத் திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள்.

இனி தொட்டதெல்லாம் துலங்கும். சின்ன வேலையைக் கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! பல மாதங்களாக அரைகுறையாக இருந்த காரியங்களையெல்லாம் உற்சாகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். மற்றவர்களின் தயவின்றி தீர்க்கமாக யோசித்து தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். மூத்த சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். உங்களின் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். வேலை கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். புது ஆடை, ஆபரணம், வாகனம் வாங்குவீர்கள். சொத்து சேரும். வீடு மாறுவீர்கள்.
05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் தந்தை வழியில் நிம்மதியுண்டு. ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள்-. வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயமடை வீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு பனிரென்டாம் வீட்டில் சென்று அதிசாரமாகியும், வக்ரமாகியும் மறைவதால் அலைச்சலும், சுபச்செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும்.
வியாபாரத்தில் இதுவரை முடங்கிக் கிடந்தீர்களே! பாக்கிகள் வசூலாகாமல் தவித்தீர்களே! வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் இருந்ததே! இனி எல்லாம் மாறும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பலவிதங்களிலும் அசிங்கப்பட்டீர்களே! தகுதியற்றவர்களிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருந்ததே! அலுவலகத்தில் இனி மதிக்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.
இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருச்சி திருவானைக்காவில் அருள்பாலிக்கும் ஜம்புகேஸ்வரரையும், தட்சிணாமூர்த்தியையும் சென்று வணங்குங்கள். சொத்துகள் சேரும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x