Published : 14 Nov 2020 07:43 AM
Last Updated : 14 Nov 2020 07:43 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: தனுசு ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

தன்னை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவுபவர்கள். எப்போதும் நியாயத்திற்காக போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசியில் அமர்ந்து எப்போதும் மருந்து, மாத்திரையுமாக உங்களை குருபகவான் பாடாய்ப்படுத்தினாரே! குடும்பத்தில் சாதாரணமாகப் பேசினாலும் சண்டையில் முடிந்ததே! அவமானங்களாலும், பணப்பற்றாக்குறையாலும் ஓடி, ஒதுங்கினீர்களே! இப்படி உங்களை சிக்க வைத்து வேடிக்கைப் பார்த்த குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான இரண்டாம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் புயல் வீசிய வீட்டில் அமைதி திரும்பும். எப்போது பார்த்தாலும் முகவாட்டத்துடனும், ஒருவித பதட்டத்துடனும் வலம் வந்தீர்களே! இனி அந்தப் பயம் நீங்கும். முகம் மலரும். தோற்றப் பொலிவுக் கூடும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போயிருந்த ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். முன்கோபத்தால் நல்ல நண்பர்கள், பிரபலங்களுடனான உறவை இழந்தீர்கள்களே! இனி கனிவாகப் பேசுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்சினையால் கவுரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் நீங்கும். எதிர்ப்புகள் அடங்கும். வழக்கு சாதகமாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். வராப்பணம் கைக்கு வரும். பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழடைவீர்கள். புது வேலை கிடைக்கும். சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. புதிய வேலை கிடைக்கும். தந்தை உதவுவார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களைகட்டும். அரசால் ஆதாயமுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டிற்கு புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் வீண் அலைச்சல்கள் அதிகரித்துக் கொண்டே போகும். திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகள் என அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சிறு சிறு விபத்துகள், உடல்நலக்குறைவுகள் வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மகனுக்கு நல்லவிதமாகத் திருமணம் முடியும். வீடு, மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பெயர், புகழ் கவுரவம் கூடும்.

23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. இந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவி கிடைக்கும். நவீனரக செல்போன் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை அதிசாரமாகியும், வக்கிரமாகியும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவதால் ஆடம்பரச் செலவு களைக் குறையுங்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். தாயாருடன் கருத்துமோதல்கள் வரும். பிரபலங்களின் தொடர்பால் சாதிப்பீர்கள்.

வியாபாரத்தில் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இடைத்தரகர்களை நம்பி ஏமாந்தீர்களே! கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்வீர்கள். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கித் தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்கள், பழி வாங்கப்பட்டீர்களே! இனி இதுவரை இருந்து வந்த அவமானங்கள், ஏமாற்றங்கள் நீங்கும். உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். வேலையில் ஆர்வம் பிறக்கும். சக ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும்.

இந்த குரு மாற்றம் சமுகத்தில் பெரிய அந்தஸ்தையும், வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் தட்சிணாமுர்த்தியை சென்று வணங்குங்கள். யோகங்கள் பெருகும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x