Published : 13 Nov 2020 06:47 PM
Last Updated : 13 Nov 2020 06:47 PM

நவ.29-ம் தேதி திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது; மலை மீது ஏறவும் தடை: ஆட்சியர் அறிவிப்பு

அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு செய்த ஆட்சியர் கந்தசாமி.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 29-ம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் சாமி தரிசனம் செய்யவும், மலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆட்சியர் கந்தசாமி இன்று (நவ.13) ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17-ம் தேதி, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி, 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் வரும் 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெறும். வரும் 29-ம் தேதி காலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

5-ம் பிரகாரத்தில் சாமி உலா

கரோனா தொற்று காரணாக கார்த்திகை தீபத் திருவிழாவில் பஞ்சமூர்த்திகளின் உலா, கோயில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் ஆகம விதிப்படி நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, யூடியூப், கோயில் இணையதளம் மற்றும் அரசு கேபிள் டிவி, உள்ளூர் தொலைக்காட்சி மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சாமி மாட வீதியில் சாமி வீதியுலா, தேரோட்டம் நடைபெறாது. தீபத் திருவிழாவில் (29-ம் தேதி) சாமி தரிசனம் செய்ய, கோயில் உள்ளே செல்வதற்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தைத் தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

கிரிவலம் செல்லத் தடை

கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி நாளில் கிரிவலம் (9-வது மாதமாக) செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. கிரிவலப் பாதையில் நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை அன்னதானம் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது. வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். அனைத்துப் பேருந்துகளும், நகரின் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்படும். செங்கம் சாலையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட மாடு மற்றும் குதிரைச் சந்தைக்கு அனுமதியில்லை.

தினமும் 5,000 பக்தர்கள்

அண்ணாமலையார் கோயிலில் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தீபத் திருவிழா தொடங்கும் 17-ம் தேதி முதல் வரும் 3-ம் தேதி வரை (29-ம் தேதி நீங்கலாக) சாமி தரிசனம் செய்ய 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, பக்தர்கள் கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவர். www.arunachaleswarartemple.tnhrce.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் முன்பதிவு செய்து, உரிய அடையாள அட்டையுடன் வருபவர்கள், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

பிரம்மதீர்த்தத்தில் தெப்பல் உற்சவம்

திருவிழாவில் சுவாமி பல்லக்கு தூக்கும் பணியாளர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தீபத் திருவிழா நாளில் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், திருப்பணி உபயதாரர்கள் ஆகியோருக்கு கோயில் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை.

அதே நேரத்தில், அவர்கள் வழங்கும் காணிக்கையைப் பெற்று, அவர்கள் தெரிவிக்கும் வகையில், கோயில் உள்ளே வழிபாடு செய்யப்படும். அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம், இந்த ஆண்டு கோயில் உள்ளே இருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் நடைபெறும்".

இவ்வாறு ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x