

ஓருயிர் ஈருடல் என்பது கணவன் மனைவிக்குப் பொருந்தக் கூடிய அற்புத வாசகம். புராணத்தில் இதை உணர்த்தும் திருக்கோலம்தான் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம். இப்பேர்ப்பட்ட தாம்பத்தியத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதுதான், பலம் சேர்ப்பதுதான் கேதார கெளரி விரதம்.
ஆயுள் முழுக்க ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன் மனைவியின் லட்சியமாக இருக்கும். அதை நிறைவேற்றித் தரும் வல்லமை மிக்கதுதான் கேதார கெளரி நோன்பு. சிவனும் சக்தியும் ஒன்று என்று அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார் என விவரிக்கிறது புராணம்.
பிருங்கி முனிவர், மிகச்சிறந்த பக்தர். ஈசனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார். சதா சர்வ காலமும் சிவநாமத்தை உச்சரித்தபடியே இருப்பார். சிவனைத் தவிர வேறு கடவுள்களைப் பற்றிச் சிந்திக்கக் கூட மாட்டார். அவரது இந்த சிவ பக்தி, சில சமயம் சில கடவுள்களை அவமதிக்கும் அளவுக்கும் போய்விடும். பிருங்கி முனிவரால், பார்வதி தேவியே இப்படியொரு அவமதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.
பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வணங்கி வலம் வருவார். ஒருமுறை, பார்வதி தேவியைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார். முனிவரின் இந்தப் போக்கு பார்வதிக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. எப்படியாவது முனிவர் தன்னையும் வணங்கிவிடவேண்டும், வலம் வரவேண்டும் என எண்ணினார். அதற்காகப் பெருமானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டார். எப்படியும் முனிவர் தன்னையும் சேர்த்து வணங்கி வலம் வருவார் என்ற நினைப்பு பார்வதி தேவிக்கு! ஆனால் முனிவரோ வண்டாக உருமாறினார். சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவே பறந்து நுழைந்தார். சிவனை மட்டும் வலம் வந்தார். அவரது இந்தச் செயல் உமையவளுக்குக் கோபமூட்டியது. சிவனும் பார்வதியும் ஒன்று என நினைத்து இருவரையும் வணங்காமல் சிவனை மட்டும் அவர் வணங்குவது ஆணவப் போக்கு என கடும் கோபமானார். தன்னை அவமதித்த முனிவருக்குப் பாடம் கற்பிக்க நினைத்து முனிவரின் கால்களை முடமாக்கினார்.
பார்வதியின் இந்தச் செயலைக் கண்டு வெகுண்டெழுந்தார் சிவன். தன்னை வணங்கிய பக்தனைக் காப்பாற்ற நினைத்தார் சிவபெருமான். முனிவரின் கால்களைப் பழையபடி மாற்றினார். தன் சாபத்தை மீறி முனிவருக்கு விமோசனம் தந்த கணவரது செயல் பார்வதிதேவியின் கோபத்தை இன்னும் இன்னும் அதிகப்படுத்தியது.
ஆனால் தன்னைச் சுற்றி வந்தாலே அது தேவியையும் வலம் வந்ததுபோலத்தான் என்பதைப் புரிந்துகொள்ளாமல் பார்வதி தேவி கோபப்படுகிறாரே என வருந்தினார் ஈசன். சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்தார் தேவி. தன் உடலை சிவன் உடலுடன் ஐக்கியப்படுத்தும் பாக்கியம் கிடைக்கத் தவம் இருப்பது ஒன்றே வழி என்பதை உணர்ந்தார் உமையவள்.
தன் எண்ணம் நிறைவேற பூலோகம் வந்த பார்வதி, ஒரு வயல்வெளியில் அமர்ந்து சிவனை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். அவரது தவத்தின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அவரைச் சுற்றியிருந்த செடி, கொடிகள் அனைத்தும் பொசுங்கின. பார்வதியின் நிலையை நினைத்து இரங்கிய ஈசன், பூலோகத்துக்கு வந்து உமையவளுக்கு தரிசனம் தந்தார். ஆட்கொண்டார். ஒருநாளும் உங்களைப் பிரியாத வரம் வேண்டும் என்ற பார்வதிதேவியின் வரத்தை ஏற்றார் சிவபெருமான்.
பிருங்கி முனிவர் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்த தேவியின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட சிவனும் பார்வதியின் விருப்பத்தை நிறைவேற்றினார்; அர்த்தநாரீஸ்வரர் ஆனார். தன் உடலின் இடபாகத்தை பார்வதிதேவிக்குத் தந்தருளினார்.
சிவனின் இந்தச் செயல் தேவியைக் குளிர்ச்சிப்படுத்தியது. இனி பிருங்கி முனிவர் மட்டுமல்ல, வேறு யாராலாம் தன்னையும் சிவனையும் பிரிக்க முடியாது என நிம்மதி அடைந்தார். இதுநாள் வரை சிவன் வேறு, சக்தி வேறு எனப் பிரித்துப் பார்த்தவர்கள் இனி, சிவனும் சக்தியும் ஒன்று என உணர்வார்கள் என்ற நம்பிக்கை சக்தி தேவிக்கு உண்டானது. இப்படிக் கணவன் உடம்பில் ஒரு பாதியாகி, யாராலும் எந்த நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிய நாள்தான் கேதார கௌரி நாள்.
அதனால்தான், பெண்கள் இந்தநாளில் நோன்பு இருக்கின்றனர். கேதாரம் என்றால் வயல். கெளரி என்பது பார்வதிதேவியின் மற்றொரு திருநாமம். வயல்வெளியில் அமர்ந்து தவமிருந்ததால், இது கேதார விரதம் எனப்படுகிறது.
தீபாவளி நாளில் கேதார கெளரி நோன்பும் அனுஷ்டிக்கப்படுகிறது. தீப ஒளித் திருநாளில், கணவரின் ஆயுள் வேண்டியும் கணவனும் மனைவியும் சமம் என்பதாக இணையுடன் இயைந்து வாழவுமான பண்டிகையே விரதமே கேதார கெளரி விரதம்.
இந்தநாளில், கணவரின் தீர்க்க ஆயுளுக்காகப் பிரார்த்திப்போம். தீர்க்கச் சுமங்கலியாகத் திகழ விரதம் மேற்கொள்வோம்!