தீபாவளி... அமாவாசை... தர்ப்பணம்!  முன்னுக்கு வரச்செய்யும் முன்னோர் வழிபாடு! 

தீபாவளி... அமாவாசை... தர்ப்பணம்!  முன்னுக்கு வரச்செய்யும் முன்னோர் வழிபாடு! 
Updated on
1 min read

ஐப்பசி மாதத்தில் தீபாவளி நன்னாளில், அமாவாசை எனும் புனித நாளில், தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். நம்மையும் நம் குடும்பத்தையும் முன்னுக்கு வரச் செய்யும் முக்கியமான வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

முன்னோர்களை பித்ருக்கள் என்று சொல்லுவோம். நம் குடும்பத்தில் இறந்துவிட்ட முன்னோர்களை தொடர்ந்து வழிபடச் சொல்லி வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்றும் இந்தநாளில், மறக்காமல் முன்னோர்களை வணங்கி ஆராதிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மாதந்தோறும் வருகிற அமாவாசை, கிரகண காலம், ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசி மகாளய பட்ச பதினைந்து நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன. இந்த நாட்களில், மறக்காமல் நம் முன்னோர்களை வணங்க வேண்டும். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

முன்னோர்களின் படங்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூக்கள் சார்த்தி வணங்க வேண்டும். தீபாராதனை காட்டி, அவர்களுக்கு தீபாவளி பட்சணங்களையும் உணவையும் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவிடுவதும் விசேஷமானது. பாவங்கள் போக்கக்கூடியது.

நாளைய தினம் ஐப்பசி மாத அமாவாசை. தீபாவளித் திருநாள். துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளில், தீப ஒளித்திருநாளில், முன்னோர்களை வணங்குவோம். தர்ப்பணம் முதலான சடங்கு சாங்கியங்களைச் செய்வோம். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முன்னோர் படங்களுக்கு நமஸ்கரித்து பிரார்த்திப்போம்.

முடிந்தால், நம் முன்னோர்களை நினைத்து எவருக்கேனும் புத்தாடைகள் வாங்கிக் கொடுங்கள். முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறுவோம். நம்மையும் நம் குடும்பத்தையும் முன்னுக்கு வரச் செய்வார்கள் முன்னோர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in