Published : 13 Nov 2020 10:43 am

Updated : 13 Nov 2020 10:53 am

 

Published : 13 Nov 2020 10:43 AM
Last Updated : 13 Nov 2020 10:53 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: சிம்ம ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

guru-peyarchi-palangal

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 15.11.2020 சுக்ல பட்சத்து பிரதமை திதி, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கிம்ஸ்துக்கினம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோக நாளில் சரத்ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி ஊன் தொழில் புரியும் காலத்திலும் தசிணாயனப் புன்யகாலத்தில் இரவு 09 மணி 34 நிமிடத்தில் மிதுனம் லக்னத்தில் நாவம்ச சக்கரத்தில் கும்பம் லக்னத்தில் ஆன்மீக அறிவொளி கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனிபகாவனின் வீடான மகரம் ராசிக்குள் நுழைகிறார்.


குருபகவான் இப்போது பெயர்ச்சியாகி சனிபகவானுடன் சென்று சேர்வதாலும், சனிபகவானின் ராசிகளாகிய மகரம் மற்றும் கும்பத்திலும் தொடர்ந்து பயணம் செய்ய இருப்பதாலும் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும். சனிபகவான் எதையும் சுருக்குபவர். குருபகவானோ எதையும் பெருக்குபவர்.

பெருகி வளர்க்கும் கிரகம் குருபகவான் சுருக்கி சுண்ட வைக்கும் கிரகமான சனிபகவானுடன் சேர்வதால் உணவுத் தட்டுப்பாடு வரும். வெங்காயம், தக்காளி, கோதுமை தட்டுப்பாடு வரும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை விழும். தங்கத்தின் விலை மேலும் உயரும். நிலக்கரி, தங்க சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோகெமிக்கல், தங்கப் படிகங்கள் செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும். ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் பாதியாக உடையும். கர்ப்பச்சிதைவுகள் அதிகரிக்கும்.
ராணுவம், காவல்துறை, பலப்படுத்தப் படும்.

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழமையான வைத்திய முறைகள் பிரபலமாகும். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கும். கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும் வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறை கல்வி வழக்கத்திற்கு வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி நவீன வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பாக, இயற்கையாக வாழ வழி வகுக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

எறும்புபோல் அயராது உழைத்து, தேன்போல் சேமிக்கும் இயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். இதுவரை, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து வீடு, மனை சேர்க்கையையும், குழந்தை பாக்கியத்தையும், ஓரளவு அடிப்படை வசதிகளையும் தந்த குருபகவான் இப்போது 15.11.2020 முதல் 13.11.2021 வரை ஆறாம் வீட்டில் மறைவதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாகப் பேசவேண்டி வரும். வாகனப் பழுதுகளால் செலவுகள் உருவாகும்.
கணவன் மனைவிக்குள் ஒளிவுமறைவு வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். குடும்பத்தில் மாற்றி மாற்றி மருத்துவச் செலவுகள் வரும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

குருபகவான், உங்கள் தன ஸ்தானத்தை பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. சில இடங்களில் வளைந்துப் பேசி காரியத்தை முடிப்பீர்கள். பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய வேலை அமையும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலைச்சுமையை எளிதாகச் சமாளிப்பீர்கள். 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சாதுக்கள், சன்னியாசிகளின் ஆசி கிட்டும்.

15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். நிர்வாகத்திறன் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடிக்கடி பதற்றப்படுவீர்கள். அனாவசியமாக அடுத்தவர்களைச் சந்தேகப்பட வேண்டாம்.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். சொத்துகள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.

23.05.2021 முதல் 22.07.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திம் ஒன்றாம் பாதத்தில் குருபகவான் செல்வதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டுக்கு அதிசாரமாகியும், வக்கிரமாகியும் செல்வதால் உங்களுக்கு யோகபலன்களை அள்ளித்தருவார். பசியின்மை, சோர்வு, முன்கோபம் யாவும் நீங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். சகோதரருக்குத் திருமணம் ஏற்பாடாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவியின் கர்ப்பப்பைக் கோளாறு நீங்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

வியாபாரத்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் செல்ல வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் நட்பையும் தவிர்க்க வேண்டும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். தள்ளுபடி விற்பனை மூலமாகவும், விளம்பர யுக்திகளைக் கையாண்டும் லாபம் அதிகரிக்கச் செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் கடைக்காரர்களுடன் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். வேலையாட்களை விரட்டாதீர்கள்.

உத்தியோகத்தில் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் எடுக்கும் விடுப்பால் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆனால் மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள்.
இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தைக் காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையைப் புரிய வைப்பதாகவும் சகிப்புத்தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியிலுள்ள ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை சென்று தரிசியுங்கள். எதிர்ப்புகள் தீரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


குருப்பெயர்ச்சி  பொதுப்பலன்கள்குருப்பெயர்ச்சிபொதுப்பலன்கள்குருபகவான்சனிபகவான்Rasi palangalGuru Peyarchi PalangalGuru Peyarchiசிம்ம ராசி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x