

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 15.11.2020 சுக்ல பட்சத்து பிரதமை திதி, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கிம்ஸ்துக்கினம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோக நாளில் சரத்ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி ஊன் தொழில் புரியும் காலத்திலும் தசிணாயனப் புன்யகாலத்தில் இரவு 09 மணி 34 நிமிடத்தில் மிதுனம் லக்னத்தில் நாவம்ச சக்கரத்தில் கும்பம் லக்னத்தில் ஆன்மீக அறிவொளி கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனிபகாவனின் வீடான மகரம் ராசிக்குள் நுழைகிறார்.
குருபகவான் இப்போது பெயர்ச்சியாகி சனிபகவானுடன் சென்று சேர்வதாலும், சனிபகவானின் ராசிகளாகிய மகரம் மற்றும் கும்பத்திலும் தொடர்ந்து பயணம் செய்ய இருப்பதாலும் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும். சனிபகவான் எதையும் சுருக்குபவர். குருபகவானோ எதையும் பெருக்குபவர்.
பெருகி வளர்க்கும் கிரகம் குருபகவான் சுருக்கி சுண்ட வைக்கும் கிரகமான சனிபகவானுடன் சேர்வதால் உணவுத் தட்டுப்பாடு வரும். வெங்காயம், தக்காளி, கோதுமை தட்டுப்பாடு வரும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை விழும். தங்கத்தின் விலை மேலும் உயரும். நிலக்கரி, தங்க சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோகெமிக்கல், தங்கப் படிகங்கள் செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும். ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் பாதியாக உடையும். கர்ப்பச்சிதைவுகள் அதிகரிக்கும்.
ராணுவம், காவல்துறை, பலப்படுத்தப் படும்.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழமையான வைத்திய முறைகள் பிரபலமாகும். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கும். கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும் வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறை கல்வி வழக்கத்திற்கு வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி நவீன வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பாக, இயற்கையாக வாழ வழி வகுக்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
அடுத்தத்தடுத்து வேலைகள் வந்தாலும் அசராமல் முடிப்பவர்களே. கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் மறைந்து வரவுக்கு மிஞ்சிய செலவுகளை ஏற்படுத்தினாரே! ஏகப்பட்ட மனஇறுக்கங்களையும், கவலைகளையும் குருபகவான் கொடுத்தாரே! சேமிப்புகளை எல்லாம் கரைத்தாரே! மற்றவர்களுக்கு ஜாமீன், உத்திரவாதக் கையெழுத்திட்டு சிக்கினீர்களே! தேனொழுகப் பேசி உங்களைப் பயன்படுத்திக் கொண்டு கறிவேப்பிலையாகத் தூக்கி எறிந்தார்களே!
ஒருவரையும் இந்த உலகில் நம்ப முடியவில்லையே என்று தனியாக உட்கார்ந்து புலம்பிய உங்களுக்கு 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் இனி தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிரச்சினைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வுதேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணர்வீர்கள். திடீர் சொல்வாக்கையும், வசதி, வாய்ப்புகளையும் குருபகவான் தரப்போகிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்.
குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். பூர்விகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் கவுரவப் பதவிகள் வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அதிக வட்டி கொண்ட கடனை குறைந்த வட்டியில் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். குரு உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வீடு மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும். என்றாலும் இக்காலகட்டத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காய்ச்சல், சளித்தொந்தரவு, விரக்தி, ஏமாற்றங்களும், சிறுசிறு விபத்துகளும் வந்து நீங்கும்.
06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்துக்குக் குரு செல்வதால் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். இளைய சகோதரர் பாசமாக நடந்து கொள்வார். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். சொத்து தொடர்பிலான பிரச்சினை சுமுகமாக முடியும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவும், விபத்துகளும், மன இறுக்கமும், திடீர் பயணங்களும், செலவுகளும், கணவன் மனைவிக்குள் பிரிவும் வந்துபோகும்.
05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்ட நட்சத்திரத்துக்கு குரு செல்வதால் மனைவி வழி உறவினர்களுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேற்றுமொழியினர் உதவுவார்கள். ஆனால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்துக்கு குருபகவான் செல்வதால் பிரச்சினை களைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கு வீர்கள்.
குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு அதிசாரமாகியும், வக்கிரமாகியும் செல்வதால் அனாவசியமாக அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண்பழி வந்து செல்லும். சொத்துகளை வாங்குவதிலும் விற்பதிலும் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் இழப்புகள், ஏமாற்றங்களி லிருந்து மீள்வீர்கள். தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் புதிய வர்த்தக ஆர்டர்கள், ஏஜென்சிகள் வரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோக ரீதியான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.
உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம், சலுகைகள் கிடைக்கும். இந்தக் குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.
பரிகாரம்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று தரிசியுங்கள். சகல பாக்கியமும் உண்டாகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |