’உனக்காக நானிருக்கிறேன்’ - சாயிபாபா அருள்வாக்கு

’உனக்காக நானிருக்கிறேன்’ - சாயிபாபா அருள்வாக்கு
Updated on
2 min read

‘உனக்காக நானிருக்கிறேன். தேவையில்லாமல் கவலையே படாதே. கெட்ட கர்மாவில் இருந்து தப்பமுடியாது. அந்த கர்மாவின் பலனை நீ முடிக்கும் வரை உன்னருகிலேயே, உனக்காக நானிருக்கிறேன், கவலைப் படாதே’ என்கிறார் சாயிபாபா.

எளிமையையும் அன்பையும் போதித்து அருளியவர் பகவான் ஷீர்டி சாயிபாபா. தன்னுடைய பக்தர்களிடம், மக்களிடம், அன்பர்களிடம் அன்பையும் கருணையும் வள்ளலைப் போல் வழங்கி அருளினார் சாயிபாபா. அதனால்தான் பாபாவின் புகழ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

பகவான் ஷீர்டி சாயிபாபாவின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் உலகெங்கிலும் உணர்ந்து சிலிர்த்தவர்கள், இன்றைக்கு சாயி குடும்பத்தில் கலந்திருக்கிறார்கள். ‘சாய்ராம் சாய்ராம் சாய்ராம்’ என்று பகவான் பாபாவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களைப் போக்குவதற்காக, கலியுகத்தில் உதித்த அற்புத மகான் என்று ஷீர்டி சாயிபாபாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

குலதெய்வப் பிரார்த்தனையைப் போல, இஷ்ட தெய்வ வழிபாடுகளைப் போல, சாயிபாபாவை விரதம் மேற்கொண்டு வணங்கி வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள். சாயிபாபா அருளிய பொறுமையையும் நிதானத்தையும் எவரொருவர் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ, அவர்களை ஒருபோதும் பாபா கைவிடுவதே இல்லை.
நம் ஓவ்வொருவருக்கும் தனித்தனியே கர்மாக்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு ஒரு கர்மா, அம்மாவுக்கு ஒரு கர்மா, மனைவிக்கு ஒரு கர்மா, பிள்ளைகளுக்கு ஒரு கர்மா, நமக்கு ஒரு கர்மா என தனித்தனியே இருக்கிறது. அந்த கர்மாக்களை, அவரவரே அனுபவிக்க வேண்டும் என்பதே நியதி. அந்த நியதியை நமக்கு பாபா, பல தருணங்களில் உணர்த்தியிருக்கிறார்.

’எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று சோர்ந்து போகாதே. உன் வாழ்வில் கெட்ட கர்மாக்கள் இருந்தால், அதை அனுபவிக்க வேண்டும். யாரும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஆனால் நிச்சயம் அதையடுத்து நல்ல வழி பிறக்கும். என்னை நம்பு. உனக்காக நான் இருக்கும் போது நீ கவலையே படாதே!’ என அருளியிருக்கிறார் சாயிபாபா.

எனவே, நமக்கு வரும் வேதனைகள், அவமானங்கள், கவலைகள், துக்கங்கள், சோதனைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள் என சகலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் சாயிபாபா. இவை அனைத்தும் நம் கர்மாவின் செயல்களே! கர்மாவைக் கடப்பதற்கான காரியங்களே! நம்முடைய கர்ம வினைகளையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் சாயிநாதன். அவற்றில் இருந்து மீள்வதற்கான சகல உபாயங்களையும் நமக்கு சூட்சுமமாக இருந்து வழிகாட்டிக்கொண்டிருக்கிறார் ஷீர்டி நாதன்.

எனவே, வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று ஒருபோதும் கலங்காதீர்கள். கவலைப்படாதீர்கள். கர்மாவில் இருந்து தப்பிக்கவே முடியாது. அவற்றில் இருந்து நம்மைக் காக்கும் சக்தியாக, நமக்கு அருகிலேயே இருந்துகொண்டு, நம்மை அரணெனக் காத்தருள்கிறார் சாயிபாபா.

எந்தவொரு வேதனைகள் வந்தாலும் ‘சாய்ராம் சாய்ராம் சாய்ராம்’ என்று கண்கள் மூடி மூன்று முறை சொல்லிக்கொள்ளுங்கள். பாபாவிடம் சரணடையுங்கள். உங்களையும் உங்களின் குடும்பத்தையும் பாபா பார்த்துக் கொள்வார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in