குபேர யோகம் தரும் மகாலக்ஷ்மி பூஜை

குபேர யோகம் தரும் மகாலக்ஷ்மி பூஜை
Updated on
1 min read

லக்ஷ்மி குபேர பூஜையைச் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்திடுவாள் மகாலக்ஷ்மி. இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

ஒரு கலசம் வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம், புனுகு, ஜவ்வாது முதலான வாசனைத் திரவியங்களை வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கலசத்தில் தண்ணீர் விடுங்கள். மஞ்சள் பூசப்பட்ட தேங்காயையும் மாவிலையையும் கலசத்தின் மேலே வையுங்கள்.

பூஜையறையில், கோலமிட்டு, அதில் வாழை இலையை வைத்து, அதன் மேலே கலசத்தை வைத்துக்கொள்ளுங்கள். கலசத்தை அம்பாளாக, மகாலக்ஷ்மியாக பாவித்து, வெண்மை நிற மலர்கள், தாமரை மலர்கள் கொண்டு அலங்கரியுங்கள்.

அருகில் கோலமிடுங்கள்.அந்தக் கோலத்தில் வரிசையாக நாணயங்களை அழகாக வரிசையாக வைத்துக்கொள்ளுங்கள். கோலத்தின் மீது வைத்த காசுகளில் உதிரிப்பூக்களைத் தூவிவையுங்கள். கலசத்துக்கு எதிரே லக்ஷ்மி குபேரர் படம் அல்லது சிலையை வைத்து, அந்தப் படத்துக்கும் பூக்களால் அலங்கரியுங்கள்.
மகாலக்ஷ்மிக்கு ஐந்து கனிகளை நைவேத்தியத்துக்கு வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, செவ்வாழைப்பழம், முழு நெல்லிக்காய், மாதுளம்பழம் அவசியம் இருக்கவேண்டும். அதேபோல், குபேரனுக்கு உலர் திராட்சை, பாதாம், முந்திரி முதலானவற்றை நைவேத்தியத்துக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

மகாலட்சுமி ஸ்லோகங்கள், மகாலக்ஷ்மி காயத்ரி, மகாலக்ஷ்மி 108 போற்றி என சொல்லி வழிபடுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி வழிபடுங்கள். பூஜையை நிறைவு செய்வதற்கு முன்னதாக, அந்தக் காசுகளை எடுத்து, கலசத்தில் லேசாக சத்தம் வருவது போல் கலசத்துக்குள் இருக்கும் நீருக்குள் விடுங்கள்.

நிறைவாக, கேசரி, பாயசம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். மறுநாள் பூஜை செய்து, கலசத்தில் இருந்து காசுகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு, பீரோவில் வைத்துக்கொள்ளுங்கள். கலச நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளலாம். துளசிச்செடியில் ஊற்றி வேண்டிக்கொள்ளலாம்.

இந்தப் பூஜையை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் காலையில் அல்லது மாலையில் சந்திரோதய நேரத்தில் செய்வது விசேஷம்.

மகாலக்ஷ்மி பூஜையை, குபேர பூஜையை மனதாரச் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். லக்ஷ்மி கடாட்சத்துடன் வாழ்வீர்கள். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in