சமணத் திருத்தலங்கள்: முக்தி அடையும் சித்த சேத்திரம்- சம்பாபுரி

சமணத் திருத்தலங்கள்: முக்தி அடையும் சித்த சேத்திரம்- சம்பாபுரி
Updated on
1 min read

இப்புவியில் எந்த இடத்தில் அனைத்து வினைகளும் நீக்கப்பட்ட புனிதமான உயிர், முக்தி அடைகிறதோ அவ்விடம் சித்த சேத்திரம் எனப்படும். இவ்வாறான சித்த சேத்திரம் ஒன்று பீகார் மாநிலத்தில் பாகல்பூர் அருகில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பெயர் சம்பாபுரி.

பகவான் மகாவீரருக்கு சந்தன் பாலா எனும் பக்தை ஆகாரம் அளித்த நிகழ்ச்சி இவ்வூரில்தான் நடைபெற்றது. ஆதிபகவன், பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் ஆகிய புண்ணிய புருஷர்கள் தமது மழைக்காலத் தங்குதலை இங்கு மேற்கொண்டுள்ளனர். பகவான் மகாவீரர் மட்டும் மூன்று முறை மழைக்காலத் தங்குதல்களை இங்கே மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களின் சமவசரண வைபவங்கள் இவ்விடத்தில் நடைபெற்றுள்ளன. மாமுனிவர்கள் தர்மகோஷ், அசோக், பத்மராத் போன்றோர் சம்பாபுரியில் சல்லேகனை எனும் உண்ணாநோன்பையேற்று முக்தி அடைந்துள்ளனர்.

பஞ்சகல்யாணம்

தீர்த்தங்கரர்களுக்கு கர்ப்ப, ஜென்ம, துறவு, கேவலி, மோட்சம் ஆகிய நிகழ்வுகள் ஐம்பெரும் கலியாணம் என்ற ஐந்து சிறப்பு விழாக்களாக நடைபெறும். இந்த விழாக்கள் வெவ்வேறு இடங்களில் நிகழும். இதில் ஐந்து விழாக்களும் ஒரே இடமான சம்பாபுரியில் ஒரு தீர்த்தங்கரருக்கு மட்டுமே நடைபெற்றுள்ளது. அவர்தான் வாழும் அனைத்து உயிர்களுக்கும் வஞ்சனை இன்றி வாழும் நெறியைப் பரப்பிய பகவான் வாசுபூஜியர் ஆவார். இப்பகவான், சிரேயாம்ச சுவாமிக்கு பின்பும் விமல சுவாமிக்கு முன்பும் உதித்த பன்னிரண்டாவது தீர்த்தங்கரர். இப்பெருமான் இங்கு முக்தி அடைந்ததால் முக்தித் தலமாகியது.

இறைவன் வாசுபூஜியருக்கு ஒரு கோயில் சம்பாபுரியில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பெரியகோயில் என அழைக்கின்றனர். அவரே இங்கு மூலவர். தன் சிகப்பு நிறத்தில் பத்மாசனத்தில் காணப்படுகிறார்.

எட்டுதாது உலோகச் சிலை

பஞ்ச கலியாணம் நடைபெற்றதையொட்டி, பகவானுக்கு ஐந்து பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் வண்ணவண்ணக் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணாடிக் கோயிலாகவே மிளிருகிறது. சுவர்களில் பல சமண நிகழ்ச்சிகளும் மகான்களின் வாழ்க்கை வரலாறுகளும் கதைகளும் மிக அழகாக சித்தரிக்கப்பட்டு கண்கொள்ளாக் காட்சியாக காணப்படுகிறது. எட்டுதாது உலோக சிலை ஒன்றும் வாசுபூஜிய தீர்த்தங்கரருக்கு நிறுவப்பட்டுள்ளது. கோயிலில் நான்கு கீர்த்தி ஸ்தம்பங்கள் அக்காலத்திலேயே அழகாக நிறுவப்பட்டு, காலமாற்றத்தால் இப்போது இரண்டு மட்டுமே உள்ளன. வாலறிவன் வாசுபூஜியரின் பாதக்கமலங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பழமையானது.

கோயிலின் வளாகத்தில் ஒரு அழகிய பூந்தோட்டம் அமைந்துள்ளது. பல்வேறு வகையான பூக்கள் பூத்து குலுங்கி மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. பூங்காவைச் சுற்றிலும் தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் வரிசையாக நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் கடும்தவம் புரிந்த பகவான் பாகுபலி ஆளுயரச் சிலையாக அமைதியுடன் அருள் வழங்குகிறார். கருங்கற்களால் வடிக்கப்பட்ட, வினைகளை வென்ற விருஷப தேவர் சிலையின் முகத்தைப் பார்க்கும் நம்பிக்கை ததும்புகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in