Last Updated : 03 Nov, 2020 07:57 PM

 

Published : 03 Nov 2020 07:57 PM
Last Updated : 03 Nov 2020 07:57 PM

கிரக தோஷம் போக்குவார் சக்கரத்தாழ்வார்! 

சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி, 12 அல்லது 24 அல்லது 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.

சக்கர ராஜன், சுதர்சனர், சக்கரத்தாழ்வார், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழியாழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சனர்... மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ள சக்கரம். இதனால்தான் சக்கரத்தாழ்வார் எனும் திருநாமம் அமைந்தது இவருக்கு!

மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சி தருவார் பெருமாள்.

திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்கிறோம். வாகனமான கருடனை கருடாழ்வார் என்கிறோம். நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளிய மரத்தை திருப்புளியாழ்வான் என்று போற்றுகிறது புராணம். விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழியாழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என்று வைணவ நூல்கள் தெரிவிக்கின்றன.

பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம்.
பொதுவாக எட்டு அல்லது பதினாறு திருக்கரங்களுடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார்.

சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானது, மகத்தானது என்று போற்றப்படுகிறது. அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி.

மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூலகாரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அவற்றை அழித்து மனஉளைச்சலை போக்கி சாந்தத்தை தருகிறார் சுதர்சனர்.

கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி ஞானத்தையும் யோக ஞானத்தையும் அருள்கிறார் சக்கரத்தாழ்வார். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்த பிரமை போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்கிறார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி, 12 அல்லது 24 அல்லது 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.

நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடைகள், கவலைகள், துக்கங்கள் முதலானவற்றை போக்கி அருளுகிறார் சக்கரத்தாழ்வார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x