Last Updated : 03 Nov, 2020 12:07 PM

 

Published : 03 Nov 2020 12:07 PM
Last Updated : 03 Nov 2020 12:07 PM

எண்ணத்தை ஈடேற்றித் தரும் காவிரி துலா ஸ்நானம்;  புண்ணியமும் பித்ரு ஆசியும் தரும் துலா ஸ்நானம் பண்ணியாச்சா?

துலாக் காவிரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன்களைத் தரும்.

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவார்கள். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகா புண்ணியம் என்பார்கள். ஐப்பசி எனப்படும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்று விவரிக்கிறது புராணம்.

இந்தப் பூவுலகில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கிறது புராணம். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.

அவை மட்டுமா?

பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள். பொதுவாகவே நதி நீராடுதல் என்பது விசேஷம். அதிலும் காவிரியில் நீராடுவது இன்னும் விசேஷம். அதைவிட மகா புண்ணியம்... ஐப்பசியில் காவிரியில் நீராடுதல்!

துலா மாதத்தில் காவிரியில் நீராடினால், நம்முடைய எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறும். இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

துலாக் காவிரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தங்கள் என வர்ணிக்கின்றன புராணங்கள். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நம்முடைய பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். ஆசி வழங்குவார்கள்.

ஐப்பசியில் காவிரியில் நீராடினால், அழகு, ஆயுள், ஆரோக்கியம் கூடும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். வாக்கு பலிதம் ஏற்படும். கல்வியில் சிறந்து விளங்கலாம், வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் பெறலாம் என காவிரி மகாத்மியம் கூறுகிறது.

தெற்கோ ஓடுகிற காவிரியை, தட்சிண கங்கை என்றும் போற்றுகிறார்கள். பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.

ஐப்பசியில் காவிரியில் நீராடி, பலன்களையும் புண்ணியங்களையும் பெற்றவர்கள் ஏராளம். காவிரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்.

அர்ஜுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்கிறது புராணம்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவியானவள் காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்கிறாள் என காவிரியை சிலாகிக்கிறது புராணம்.

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவிரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன்களைத் தரும்.

ஐப்பசி மாதம் முழுவதும் துலாமாதம் எனப்படும். இந்தக் காலங்களில் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலா ஸ்நானம் என்று போற்றப்படுகிறது. திருச்சி, தஞ்சை முதலான சோழ தேசத்தில் துலா காவிரி ஸ்நானம் என்றே அழைப்பார்கள்.

காவிரி நிரம்பி வழியும் காலம் என்பதால், காவிரியில் நீராடிவிட்டு, கரைக்கு அருகில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x