கஷ்டமும் நஷ்டமும் தீர்க்கும் அஷ்ட பைரவர்கள்; பைரவாஷ்டகம் படித்தால் இனி பயமுமில்லை; தோல்வியுமில்லை!
பைரவ வழிபாடு என்பது நம் பயத்தையெல்லாம் போக்கக்கூடியது. எதிர்ப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கக் கூடியது. இன்னல்களையெல்லாம் போக்கியருளுவார் பைரவர். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்து, நம் வாழ்வில் பக்கத்துணையாக இருப்பார் பைரவர். கிரக தோஷங்கள் அனைத்தையும் விலக்கி அருளுவார்.
பைரவரில் எட்டு பைரவர்கள் உண்டு என்கிறது புராணம். எட்டு பைரவர்களையும் வணங்கித் தொழுதால், எல்லா வளங்களையும் நலன்களையும் தந்தருளுவார் பைரவர்.
எட்டு பைரவரை அஷ்ட பைரவர்கள் என்று போற்றுகிறது புராணம்.
அசிதாங்க பைரவர்
முக்கண், தலைமாலை, கதை, கபாலம், பாணபாத்திரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம், திகம்பரத் தோற்றம், வெண்மையான நிறத்தில், ப்ரஹ்மாணி சக்தியுடன் அன்ன வாகனத்தில் வீற்றிருப்பார் இந்த பைரவர்.
ருரு பைரவர்
முக்கண், டங்கம், க்ருஷ்ணாமிருகம் (மான்) பாணபாத்திரம், கத்தி, மகேஸ்வரி சக்தியுடன் ரிஷப வாகனத்தில் வீற்றிருப்பார் ருரு பைரவர்.
சண்ட பைரவர்
முக்கண், சாந்த முகம், வில், அம்பு, கத்தி, பாணபாத்திரம், வெண்மையான நிறம் கொண்டவர். கௌமாரி சக்தியுடன் மயில் வாகனத்தில் வீற்றிருப்பார். சண்ட பைரவர்.
குரோத பைரவர்
முக்கண், கதை, சங்கம், பாணபாத்திரம், சாந்தமும் கருணையுமான முகம், குமாரர், திகம்பரத்தோற்றம், நீல நிறத்துடன் லட்சுமி தேவி சக்தியுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார்.
உன்மத்த பைரவர்
முக்கண், குமாரர், திகம்பரத்தோற்றம், கட்கம் (கத்தி), கபாலம், உலக்கை, கேடயம், வராஹி தேவி சக்தியுடன் அஸ்வ (குதிரை) வாகனத்தில் வீற்றிருப்பார்.
கபால பைரவர்
பாசக்கயிறு, வஜ்ரம், கத்தி, பாணபாத்திரம், இந்திராணி சக்தியுடன் யானை (கஜம்) வாகனத்தில் வீற்றிருப்பார்.
பீஷண பைரவர்
கத்தி, சூலம், கபாலம், உலக்கை, சாமுண்டி சக்தியுடன் சிவந்த நிறத்தோடு கூடியவராக பிரேத வாகனத்தில் வீற்றிருப்பார்.
சம்ஹார பைரவர்
பத்துத் திருக்கரங்கள், முக்கண், சர்ப்பத்தையே பூணூலாகத் தரித்திருப்பார் .கோரைப்பற்கள், குமாரர், திகம்பரத் தோற்றம் , சண்டிகா சக்தியுடன், சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பார். இவரது கைகளில் சூலம், டமருகம், சங்கம், பாணபாத்திரம், கதை, சக்கரம், கத்தி, கட்வாங்கம், பாசம், அங்குசம் முதலானவை ஏந்தியிருப்பார். தேகத்தில் தலை மாலைகளை அணிந்து காணப்படுவார். சில விக்கிரஹத்தில் நாய் வாகனத்துடனும் காட்சி தருவார் பைரவர்.
பைரவருக்கு உகந்த நாள், அஷ்டமி. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி. கஷ்டமும் துக்கமுமான நிலையில், அஷ்டமி என்றில்லாமல், பைரவரை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். பூஜிக்கலாம். வணங்கலாம். பிரார்த்திக்கலாம்.
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளலாம். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். வடை மாலை சார்த்தியும் பிரார்த்தித்துக் கொள்ளலாம்.
கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்ட பைரவர்களையும் வேண்டுங்கள். தீய சக்திகளையும் எதிர்ப்புகளையும் துவம்சம் செய்து காத்தருளுவார் காலபைரவர்!
