

வாழ்வில் தடைகளும் துக்கங்களும் இல்லாதவர்கள் என எவருமில்லை. அப்படியான சூழ்நிலைகளிலெல்லாம் அனுமனை வணங்கித் தொழுதால் போதும்... ஆபத்பாந்தனாக வந்து நம்மைக் காத்தருள்வார் ஆஞ்சநேயர்.
காரியத்தை வீரியமாக்கித் தந்தருள்வார் அனுமன். அஞ்சனை மைந்தனை வணங்கித் தொழுதால், நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார் ஆஞ்சநேயர்.
அனுமன், ஆஞ்சநேயர், அஞ்சனை மைந்தன் என்றெல்லாம் சொன்னாலும் தன்னை ராமபக்தன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதமும் பூரிப்பும் கொண்டவர் அனுமன். தான் எப்போதும் ராமபிரானின் அணுக்கன் என்பதாலும் ராமபிரானின் பக்தன் என்பதாலும் கைகூப்பிய நிலையிலேயே நமக்குக் காட்சி தந்து அருளுகிறார் ஆஞ்சநேயர் பெருமான்.
கருடாழ்வாரும் அனுமனும் மட்டுமே கைக்கூப்பிய நிலையில் சந்நிதியில் அருளாட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பெருமாள் கோயில்களில் அனுமனுக்கு சந்நிதி அமைந்திருக்கும். அதேபோல், பல தலங்களில் அனுமன் தனிக்கோயிலில் குடிகொண்டிருக்கிறார்.
அனுமனை அனவரதமும் வேண்டிக்கொள்ளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அனுமன் சாலீசா பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.
மேலும் தேக பலத்தையும் மனோபலத்தையும் தந்தருளுபவர் ஆஞ்சநேயப் பெருமான்.
சிலர் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவார்கள். சின்னதான கவலையைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். சின்ன விஷயத்துக்குக் கூட பயந்து நடுங்குபவர்களாக இருப்பார்கள். மனோபலம் இல்லாமல் தவித்து மருகுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். பொதுவாக, புதன் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அனுமனை தரிசிக்கலாம், வேண்டிக்கொள்ளலாம். அதேபோல் செவ்வாய்க்கிழமைகளிலும் அருகில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள அனுமனையோ தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ள அனுமனையோ தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் கூடுதல் பலன்களைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வளர்பிறை செவ்வாய்க்கிழமை வழிபாடு என்பது ரொம்பவே விசேஷமானது.
அனுமனுக்கு கொய்யாப்பழம் நைவேத்தியம் படைப்பது உகந்தது. அதேபோல் அச்சுவெல்லமும் படைத்து வேண்டிக்கொள்கிற பக்தர்களும் உண்டு.
" ஓம் ஹம் ஹனுமந்தாய வீரரூபாய நமஹ" என்ற மந்திரத்தை ஜபித்து வாருங்கள். மனதில் உள்ள பயத்தைப் போக்குவார். மனோபலத்தைத் தருவார். காரியத்தை வீரியமாக்குவார்.