ஐப்பசி சோமவாரத்தில் சிவ தரிசனம்; பாவங்கள் போக்கும் சிவ வழிபாடு! 

ஐப்பசி சோமவாரத்தில் சிவ தரிசனம்; பாவங்கள் போக்கும் சிவ வழிபாடு! 
Updated on
1 min read

ஐப்பசி சோமவாரத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், மாலையில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்துப் பிரார்த்தித்துக் கொண்டால், நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.

உலக மக்களுக்கு அம்மையாக அப்பனாக அம்மையப்பனாகத் திகழ்பவர்கள் சிவனாரும் பார்வதிதேவியும் என சிலிர்ப்புடன் விவரிக்கிறது புராணம் .உலகுக்கே படியளப்பவன் என்று சிவனாரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

சிவ வழிபாடு என்பது, இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நன்மைகளைத் தரவல்லது. இம்மை என்றால் இந்தப் பிறவியைக் குறிக்கும். இந்த வாழ்க்கையைக் குறிக்கும். மறுமை என்றால் இறப்பிற்குப் பின் உள்ள உலகைக் குறிக்கும். பித்ரு லோகத்தைக் குறிக்கும். சிவனாரை வழிபட வழிபட, லோகாயத வாழ்வில், இல்லறத்துக்குத் தேவையானவற்றை நமக்கு வழங்கி அருளுவார் ஈசன். அதேபோல், ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறார் தென்னாடுடைய சிவனார்.

இம்மையில் நமக்கு அருளுவதைப் போலவே மறுமையிலும் சிவனாரின் திருவடியைப் பற்றிக் கொள்ளலாம். தன் திருவடியில் நமக்கு இடம் தந்து பாவங்களையெல்லாம் போக்கி அருளுகிறார் என விவரிக்கிறது புராணம்.

சிவ வழிபாடு என்பது விசேஷமானது. ஞானம் தரக்கூடியது. முக்தியை அளிக்கக் கூடியது. பிறவா வரத்தைத் தரக்கூடியது. அதனால்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மக்களுக்காகவும் தேசத்துக்காகவும் உலக நன்மைக்காகவும் ஏராளமான கோயில் கட்டப்பட்டு, இன்றளவும் வழிபடப்பட்டு வருகின்றன.

பெருமாளை புதன் கிழமையிலும் சனிக்கிழமையிலும் வழிபடுவது போல், அம்பாளை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது போல், முருகக் கடவுளை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது போல், சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை உகந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரன். சந்திரனைப் பிறை போல் சிரசில் சூடிக்கொண்டிருப்பவர் சிவபெருமான். அதனால்தான் சிவபெருமானுக்கு சோமநாதர், சோமேஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்தன.

சந்திரன் என்பவன் மனோகாரகன். நம் மனதை ஆளுபவன். சந்திரனை சூடிக்கொண்டிருக்கும் சிவபெருமானோ நம்மையே ஆளுபவன். மூவுலகையே ஆளுபவன். எனவே ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவ வழிபாடு செய்வது, எண்ணற்ற நன்மைகளை வழங்கக் கூடியது என்கிறார்கள் பக்தர்கள்.

அதிலும் குறிப்பாக, ஐப்பசி மாதத்தில் வருகிற திங்கட்கிழமைகள் இன்னும் விசேஷமானவை. பெளர்ணமிக்கு அடுத்தடுத்த நாளிலும் பெளர்ணமிக்குப் பின்னர் வரக்கூடிய திங்கட்கிழமையிலும் மாலையில், குளிர்ந்த நேரத்தில், சிவன் கோயிலுக்குச் சென்று சிவனாருக்கு வில்வம் சார்த்தி வணங்கி வருவதும் பிரார்த்தனை செய்வதும் நம் பாவங்களையெல்லாம் போக்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஐப்பசி சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், மாலையில் சிவ தரிசனம் செய்யுங்கள். நம் சிந்தையில் தெளிவையும் செயலில் நேர்த்தியையும் புத்தியில் சுறுசுறுப்பையும் வாழ்வில் இனிமையையும் தந்து அருள்பாலிப்பார் தென்னாடுடைய சிவனார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in