Published : 22 Oct 2015 10:49 AM
Last Updated : 22 Oct 2015 10:49 AM

சித்தர்கள் அறிவோம் - சிவமாக ஒடுங்கிய யோகி ஸ்ரீ வீரராகவ சுவாமிகள்

சிவத்திலிருந்து தோன்றி சிவமாகவே வாழ்ந்து, சித்தராகப் பித்தராகத் திரிந்து மீண்டும் சிவமாகவே ஒடுங்கிய ஞானிகள் பலரில் ஒருவர் திருவொற்றியூர் வீரராகவ சுவாமிகள்.

இவரது பூர்விகம் பற்றி துல்லியமான தகவல்கள் இல்லை. வடநாட்டிலிருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. திருவொற்றியூர் சுடுகாட்டில் சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு, திகம்பரராக திரிந்தவர் இவர். சித்தரென்று அறியாமல் இவரைப் பித்தனென்று ஏசியும் கல்லெறிந்தும் விரட்டியபோதெல்லாம் அனைத்தையும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவர் இவர்.

நவகண்ட யோகம்

இவரது நிர்வாணக் கோலத்தைக் கண்ட காவல்துறையினர், ஒருநாள் இவரைப் பிடித்துப்போய் காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைத்துவைத்தனர். இரவு நேரத்தில் காவலர் ஒருவர் அந்த அறையினுள் எட்டிப் பார்த்தபோது, சுவாமிகளின் உடல்பாகங்கள் தனித்தனியாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தாராம். அவர்கள் வந்து பார்த்தபோது சுவாமிகள் முழு உடலுடன் அவர்களைப் பார்த்து நகைத்தாராம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் சுவாமிகளின் பெருமை வெளி உலகிற்கு தெரிந்தது. சுவாமிகளுக்கு சாலையோரக் கடைகளில் தேநீர் குடிப்பது மிகவும் பிடித்தமானது. அருகிலிருந்த கடைக்காரர் ஒருவர் தினமும் அதிகாலையின் முதல் தேநீரை சுவாமிகளுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வியாபாரத்தை துவங்குவாராம். சுவாமிகளைத் தேடி வரும் பக்தர்கள் வாங்கிக் கொடுக்கும் டீயை சிறிது பருகிவிட்டு யாராவது ஒரு பக்தரிடம் கொடுத்து, அவரும் பருகிவிட்டால் அந்த நபரின் துன்பங்கள் அனைத்தையும் சுவாமிகள் ஏற்றுக்கொண்டதாக ஒரு நம்பிக்கை இப்பகுதி மக்களுக்கு இருந்துள்ளது.

கடவுள் அருந்திய உணவுக்குச் சமம்

பேரறிவான ஞானத்தைப் பெற்ற ஞானிகள் உண்ட உணவு, திருமால் போன்றோர் அருந்திய உணவிற்கு சமமானதென்றும், சித்தம் தெளிந்தவர்கள் உண்ட மிச்சத்தை (சேடம் - மிச்சம்) உண்டால் முக்தி கிடைக்குமென்றும் திருமூலர் கூறுகிறார்.

வீரராகவ சுவாமிகள் ஏதேனும் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டால் அந்த வீட்டிலிருக்கும் துன்பங்கள் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது.

பக்தர்களே பூஜை செய்யும் லிங்கம்

பல அதிசயங்களைச் செய்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்த சுவாமிகள் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே தெரிவித்து, தமது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யவேண்டிய லிங்கத்தையும் அடையாளம் காட்டினார். 1964-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் தேதி, சதயநட்சத்திரத்தில் தமது உடலிலிருந்து ஆன்மாவை நீக்கிக்கொண்டார். அவரது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை, இங்கு வரும் பக்தர்கள் தொட்டு வணங்கவும் தாங்களாகவே அபிஷேகம் செய்யவும் பூஜை செய்யவும் இங்குஅனுமதிக்கப்படுகிறது.

சுவாமிகளை தரிசிக்க :

திருவொற்றியூரில் எண்ணூர் முதன்மை சாலையில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டின் வெளி காம்பவுண்டில் சுவாமிகளின் ஆலயம் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x