இஸ்லாம் வாழ்வியல் - கண்ணீர் சிந்திய தலைமை நீதிபதி

இஸ்லாம் வாழ்வியல் - கண்ணீர் சிந்திய தலைமை நீதிபதி
Updated on
1 min read

அவள் ஒரு ஏழை மூதாட்டி. தன் மகனைப் படிக்க வைக்க இயலாத நிலையில் அவனை ஒரு கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். கடையின் பக்கத்தில் ஒரு பாடசாலை இருந்தது.

கடைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சிறுவன் பாடசாலைக்குச் சென்றுவிடுவான். சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு ஆசிரியர் அன்பு கொண்டார்; கவனத்துடன் பாடங்களைக் கற்பித்தார்.

விரைவில் விஷயம் வீட்டுக்குத் தெரிந்தது. தாய், சிறுவனுக்கு அறிவுரை சொன்னாள். அது முடியாமல் போகவே நேரே பாடசாலைக்குச் சென்றாள். ஆசிரியரைக் கடிந்துகொண்டாள். ஆனால் அந்தப் பையனின் ஆர்வமோ தணியவேயில்லை. காலம் கடந்தது. சிறுவன் வளர்ந்து பேரறிஞனான். அவரது பெயர் இமாம் அபு யூசுப்.

ஜனாதிபதி ஹாரூன் ரஷீத், அந்த அறிஞரின் புகழைக் கேட்டு, தம் அரசின் தலைமை நீதிபதியாக நியமித்தார். ஒருநாள் ஹாரூன் ரஷீத், தலைமை நீதிபதியைக் கௌரவிக்கும் பொருட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் சிறப்பு உணவாக, ‘ரோஹ்னி பிஸ்தா' (நெய்யால் செய்யப்பட்டட உயர்தரமான ஒரு வித இனிப்புப் பண்டம்) பரிமாறப்பட்டது.

அதைக் கண்டதும் நீதிபதியின் கண்களில் கண்ணீர் திரண்டது. பதறிப் போன ஜனாதிபதி, “இமாம் அவர்களே! என்னவானது தங்களுக்கு?” என்று விசாரித்தார்.

அதற்கு அந்த அறிஞர், “ஜனாதிபதி அவர்களே! எனக்குப் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் வேலைக்குச் செல்லாமல் பாடசாலைக்கு செல்வதைக் கண்டு கோபம் கொண்ட என் தாயார், என் ஆசிரியரை திட்டலானார். ஆனால், எல்லாவற்றையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட என் ஆசிரியர் இமாம் அபூ ஹனீபா அவர்கள், “பெரியம்மா! கவலைப்படாதீர்கள்! உங்கள் மகன் வெறும் காய்ந்த ரொட்டித் துண்டுகளை சம்பாதிப்பதற்கு பதிலாக கல்வி, கேள்விகளில் சிறந்து ‘ரோஹ்னி பிஸ்தா' உண்ணும் காலம் வரத்தான் போகிறது. பொறுமையாய் இருங்கள்!” என்றார்.

எவ்வளவு தீர்க்கதரிசனம் அவருடையது! அதை நினைத்து அழுகிறேன்!” என்றார் மாமேதை அறிஞர் பெருமானார் இமாம் அபூ யூஸீஃப்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in