Published : 15 Oct 2015 10:27 AM
Last Updated : 15 Oct 2015 10:27 AM

தெய்வத்தின் குரல்: சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாதது ஏன்?

சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். வெள்ளை வெளேரென்று வீணா, புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம்.

அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள், மகான்கள் பண்ணியிருப்பது, கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள். அவற்றை ஓதுகிறோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் சுலோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம். தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். ஒட்டக்கூத்தருடைய ஊர்தான் கூத்தனூர்.

காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மகா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன.

மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனசில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.

நியூஸ் பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்' தெய்வம். பிரம்மா ‘அன்பாபுலர்' தெய்வம். அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோயிலில்லை என்றால் அது நியாயம். நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பதிவிரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவிரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க மாட்டார்கள். சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படிப் பதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள்.

ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டுவிட்டு, தான் மட்டும் மகிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள்.

அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா, லட்சுமிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி, பொதுத் தலத்தில் கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.

கோயிலில்லாத கடவுள்

நம் தேசத்தில் இத்தனை ஆயிரம் கோயில்கள் இருந்தும், ஒவ்வொரு கோயிலிலும் ஏகப்பட்ட சந்நிதிகள் இருந்தும் அநேக உத்ஸவாதிகள் நடத்தப்பட்டபோதிலும் பிரம்மாவுக்கு எதுவுமே காணோம். அபூர்வமாக எங்கேயாவது புஷ்கர் மாதிரி ஒரு க்ஷேத்திரத்தில்தான் தேடித் தேடி அவருக்குக் கோயில் பார்க்க முடிகிறது. பிரம்மா கோயில் என்றாலே புஷ்கரைத்தான் இன்று நினைக்கிறார்கள்.

நம்முடைய கும்பகோணத்திலேயே பிரம்மாவுக்குத் தனிக் கோயில் இருப்பது ரொம்பப் பேருக்குத் தெரியவில்லை. காஞ்சீபுரத்திலும் கும்பகோணத்திலும் தடுக்கி விழுந்த இடமெல்லாம் கோயில்கள் என்பார்கள். காஞ்சீபுரத்தில் நாம் ஜென்மாவில் பண்ணுகிறதற்கெல்லாம் கணக்கு எழுதும் சித்திரகுப்தனுக்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறதென்றால், கும்பகோணத்தில் ஜென்மாவைத் தரும் பிரம்மாவிற்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறது.

திருக்கண்டியூர் என்று திருவையாற்றுக்குக் கிட்டே இருக்கிறது. அது பரமசிவன் பிரம்மாவுக்கு ஆதியில் இருந்த ஐந்து தலைகளில் ஒன்றைச் சேதித்த க்ஷேத்திரம். அங்கே சிவனுக்கு பிரம்மச் சிரக்கண்டீசர் என்றே பேர். அங்கே பிரம்மாவுக்கும் சந்நிதி இருக்கிறது.

கொங்கு நாட்டிலுள்ள த்ரிமூர்த்தி க்ஷேத்ரமான பாண்டிக் கொடுமுடியிலும் இருக்கிறது. சிதம்பரத்தில் பிரம்மாவையே சண்டேச்வரர் என்று சொல்லி, கனக சபையைச் சுற்றி வரும்போது அவருக்கு ஒரு சின்ன கோஷ்டம் காட்டுகிறார்கள். ஆனாலும் இதெல்லாம் சமுத்திரத்தில் ஒரு துளி மாதிரிதான். நம் தலையெழுத்தை எழுதுகிறவரின் தலையெழுத்து இப்படி இருக்கிறது.

- தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x