

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் டிச.27-ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் இன்று நடைபெற்றது.
திருநள்ளாற்றில் சனி பகவானுக்கு தனிச் சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவின்போது நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாற்றுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா பேரிடர் சூழலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஆரம்பக்கட்ட ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் திருநள்ளாற்றில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் விருந்தினர் இல்லத்தில் இன்று (அக். 28) நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ், காரைக்கால் வடக்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம், பொதுப்பணித்துறை, நலவழித்துறை மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கரோனா தொற்றுப் பரவல் உள்ள சூழலில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் எவ்வாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், "கரோனா தொற்றுப் பரவல் உள்ள சூழலில் எந்த வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வது, கரோனா தடுப்பு நடவடிக்கையாக அவ்வப்போது அரசு அறிவிக்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்களை எவ்வாறு அனுமதிப்பது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது, சுகாதார நடவடிக்கைகள், நன்கொடைகள் பெறுவதற்கான முறைகள், அன்னதானம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அந்தந்த சூழ்நிலைக்கேற்ற வகையில் அறிவிக்கும் விதிமுறைகளுக்கேற்ப தயார் நிலையில் இருக்க வேண்டியது குறித்தும் பேசப்பட்டது. மேற்கொண்டு செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து அடுத்தடுத்து நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டங்களில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.