

உலகங்கள் அனைத்திற்கும் அன்னையாகத் திகழ்பவள் தேவி. அதனால்தான் அவளை ஜகன் மாதா என்று போற்றுகிறோம். ஆதியாகத் திகழ்பவளும் அவளே. அனைத்து மூலங்களுக்கும் காரணகர்த்தாவும் இவளே. அதனால்தான் ஆதிலக்ஷ்மி என்று கொண்டாடுகிறோம்.
ஸ்வயம்ப்ரகாசையாகவும் ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாதவளாகவும் பிரமாண்ட சக்தியுடன் திகழ்கிறாள் தேவி என்று போற்றுகிறது புராணம்.
கனிவும் கருணையும் கொண்டவள் தேவி. லக்ஷ்மி என்று அவளை அழைக்க அழைக்க, நம் மனமும் வாழ்வும் இனிமையாகும். இனிமையாக்கித் தந்தருள்வாள். ‘லக்ஷ்மி’ எனும் திருநாமமே தேனினும் இனிய தித்திப்பைக் கொண்டது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
லக்ஷ்மி என்று தேவியின் திருநாமத்தைச் சொல்லச் சொல்ல, அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். இம்மை என்று சொல்லப்படுகிற இந்த உலக வாழ்க்கையில், சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வாள் மகாலக்ஷ்மி. மேலும் மறுமை என்று சொல்லக்கூடிய மோட்சத்தையும் அருளக்கூடியவள் மகாலக்ஷ்மி தேவி என்று சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆதிமகாலக்ஷ்மி என்று கொண்டாடப்படும் மகாலக்ஷ்மியை, தொடர்ந்து பூஜித்து வந்தால், வாழ்க்கையை அழகாக்கித் தருவாள். இனிதாக்கித் தருவாள். இன்னல்களையெல்லாம் போக்கி அருளுவாள்.
கருமேகத்தை பழிக்கும் அழகிய கூந்தல் மிக்கவள். நீலோத்பல மலரையே ஜெயிக்கும் அழகு பொருந்திய அடர்ந்த கூந்தல் உள்ளவள். அஷ்டமி சந்திரனைப் போல் அழகிய நெற்றி பொருந்தியவள். கரும்பு வில் தோற்கும் புருவம் கொண்டவள். சூர்யனையும் சந்திரனையும் போல் தாமரைக் கண்களை உடையவள் என வர்ணிக்கிறது புராணம்.
சதுர்புஜங்கள் கொண்டவள். மேலிரு கரங்களில் தாமரையைத் தாங்க, கீழிருகரங்கள் வரமும் அபயமும் அளித்தபடி காட்சி தருகிறாள். தாமரை போன்ற திருப்பாதங்களைக் கொண்டவள் என விவரிக்கிறது புராணம்.
தேவர்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,யோகிகள்,மஹான்கள் என அனைவராலும் ஆராதிக்கப்பட்டவளை, மகாலக்ஷ்மியை நாமும் மனதார வேண்டுவோம். கமலம் எனப்படும் தாமரையில் இருப்பவள் என்பதால் கமலா என்றும் ஆனந்தத்தை உண்டு பண்ணுவதால் ரமா என்றும் என்றும் போற்றப்படுகிற மகாலக்ஷ்மியை, ஸ்ரீ என்ற ஒற்றைச் சொல்லில் அழைத்தாலே ஓடிவந்துவிடுவாள்.
சர்வ லோக மாதாவை வணங்குவோம். அதனால்தான் மகாலக்ஷ்மித் தாயார் என்று அவளைச் சொல்லுகிறோம். தரிசிக்கிறோம். பூஜிக்கிறோம். வழிபடுகிறோம். வணங்குகிறோம்.
லோகமாதாவை, மகாலக்ஷ்மித் தாயாரை வெண்ணிற மலர்கள் சூட்டி வழிபடுவோம். இனிப்பு அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கிப் பிரார்த்தனை செய்துகொள்வோம். நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பாள் மகாலக்ஷ்மி அன்னை!