

’பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருக்காப்பா’ என்போம். ‘வீட்டுக்கு விளக்கேத்த ஒரு மகாலக்ஷ்மி வந்தாச்சு’ என்று பெருமையும் மனநிறைவுமாகச் சொல்லுவோம். மகாலக்ஷ்மி எனும் தெய்வத்தை இப்படித்தான் நம் அன்றாட வாழ்வில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
திருமாலின் திருமார்பில் குடிகொண்டிருக்கும் மகாலக்ஷ்மி, நம் உள்ளங்கையில் கூட வாசம் செய்கிறாள். பசுவிலும் கூட வாசம் செய்கிறாள். நாம் வாசலில் இடுகிற கோலத்தில், பூஜையறையில் ஏற்றிவைக்கிற தீபத்தில் என சகல இடங்களிலும் மகாலக்ஷ்மி வியாபித்திருக்கிறாள்.
அனவரதமும் மகாலக்ஷ்மியை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். ‘தேவி மகாத்மியம்’ வழிபட வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
மஹாலக்ஷ்மீம் மஹாதேவீம் விஷ்ணுவக்ஷ ஸ்தலாலயாம்
சங்க சக்ர கதாஹஸ்தாம் பத்மினீம் பத்மஸம்பவாம்"
அதாவது, "சர்வ உலகங்களுக்கும் தாயானவள் ஸ்ரீலக்ஷ்மி. தனக்கு மேல் ஒரு தெய்வமில்லை எனும் நிலையை உடையவள். ஸ்வயம்ப்ரகாசையானவள். மஹா விஷ்ணுவின் ஹ்ருத் பங்கஜத்தை விட்டு, இதயக் கமலத்தை விட்டு அகலாதவள். சங்கு, சக்கரம், கதை இவற்றை தரிப்பவள். தாமரை போன்ற முகம் கொண்டவள். தாமரையில் தோன்றியவள். அப்பேர்ப்பட்ட ஸ்ரீலக்ஷ்மியை சரணமடைகிறேன்’ என்று அர்த்தம்.
இந்த ஸ்லோகம், வலிமை மிக்க ஸ்லோகம். கருணையும் கனிவும் கொண்ட மகாலக்ஷ்மியை ஆராதிக்கிற ஸ்லோகம். மங்கல காரியங்கள் அனைத்தையும் நம் இல்லத்தில் நடத்திக் கொடுக்கிற ஸ்லோகம். இல்லத்தில் மகாலக்ஷ்மியானவள், நிரந்தரமாக வாசம் செய்வதற்கு அவளை அழைப்பது அமரவைப்பதற்கான ஸ்லோகம்.
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். ஏழு முறை அல்லது 11 முறை அல்லது 54 முறை அல்லது முடிந்தால் 108 முறை என்று சொல்லி வாருங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், 108 முறை சொல்லி வழிபடுங்கள்.
மகாலக்ஷ்மிக்கு வெண்மை நிற மலர்கள் உகந்தவை. தாமரை மலர் உகந்தது. கிடைக்கும் போதெல்லாம் தாமரை மலர் கொண்டு மகாலக்ஷ்மியை அலங்கரியுங்கள்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மியை ஆராதித்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் முதலான இனிப்பை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
நம் இல்லத்தில் மகிழ்ந்து வந்து வாசம் செய்வாள் மகாலக்ஷ்மி. தடைப்பட்ட மங்கல காரியங்களையெல்லாம் நடத்திக் கொடுப்பாள் தேவி. இதுவரை இருந்த துக்கத்தையும் கவலைகளையும் விரட்டியடித்து அருளுவாள் மகாலக்ஷ்மி.