

‘நம்பிக்கையானது உங்களிடம் இருந்தால், உங்களின் இந்த பரந்துபட்ட உலகில், சாத்தியமில்லாதது கூட சாத்தியமாகிவிடும்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் ஷீர்டி சாயிபாபா. தன்னுடைய சாந்நித்தியத்தை ஷீர்டி எனும் கிராமத்தில் இருந்துகொண்டு, உலகம் முழுக்கவும் படரவிட்டு வியாபிக்கச் செய்தவர் பாபா என்று பக்தர்கள் போற்றுகிறார்கள்.
பாபா எனும் அற்புதமான மனிதரின் பேரன்பும் அவரின் அருளாடல்களும் உலகத்து மனிதரிடம் பாபாவை, மகான் என்று கொண்டாட வைத்தது. உலகை உய்விக்க வந்த மகான்களில் பாபாவும் ஒருவர் என்று பக்தர்கள் கொண்டாடினார்கள். கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஷீர்டி எனும் புனித நகரத்துக்குச் சென்று அங்கே பாபாவின் திருவடி பட்ட பூமியை, ஆஸ்ரமத்தை, ஆலயத்தை வணங்கி வருகிறார்கள். ஷீர்டி எனும் புனித பூமியில் இருந்து பிடி மண்ணெடுத்து வந்து, இந்தியாவில் பல ஊர்களில் பாபாவுக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
அங்கெல்லாம், அந்தக் கோயில்களிலெல்லாம் பாபாவின் சாந்நித்தியத்தை உணர்ந்து வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். பாபாவின் சக்தியால், தங்களின் குறைகளும் கவலைகளும் நிவர்த்தியாகின்றன என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.
பாபா, தன் பக்தர்களிடம் சொன்ன அருளுரைகள் ஏராளம்.
பகவான் ஷீர்டி சாயிபாபா இப்படியாக அருளியுள்ளார்...
‘நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. இந்த நம்பிக்கைதான் ஒருவருக்கொருவர் வைக்கும் போது அன்பாகவும் மரியாதையாகவும் சொல்லப்படுகிறது. அதே கடவுளிடம் வைக்கிற போது பக்தியாகச் சொல்லப்படுகிறது. உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையைத்தான் தன்னம்பிக்கை என்று சொல்லுகிறோம்.
வாழ்வில், நம்பிக்கை என்பது மிக மிக அவசியம். நம்பிக்கையை ஒருபோதும் புறந்தள்ளிவிடாதீர்கள். உங்கள் மனதில் இருந்து நம்பிக்கையை அகற்றிவிடாதீர்கள். இந்த நம்பிக்கைதான் உங்களை உயர்த்தும். வாழ்வில் உங்களுக்குத் தேவையானதையெல்லாம் வழங்கும்.
எனவே, நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நம்பிக்கை வலுவாக இருந்துவிட்டால், இங்கே சாத்தியமில்லாதது கூட உங்களுக்குச் சாத்தியமாகும். உங்கள் நம்பிக்கை அனைத்தும் உங்களுக்குப் பலனாகக் கிடைக்கும் என்பது உறுதி.
நம்பிக்கையை வலுவாக்கிக் கொண்டே இருங்கள். நல்லனவெல்லாம் நடத்தித் தருவேன் என பகவான் சாயிபாபா அருளியுள்ளார்.